பாரிஸ்: பிரான்சின் வடக்குப் பகுதியில் கைதி ஒருவரை நீதிமன்றத்திலிருந்து சிறைக்குக் கொண்டுசென்ற வேன் தாக்கப்பட்டது. இந்தச் சம்பவம் மே 14ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
வேனில் இருந்த கைதியான முகம்மது அம்ராவைக் காப்பாற்றவே தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாலைச் சுங்கச் சாவடியை வேன் நெருங்கியபோது கார் ஒன்று அதன்மீது மோதியது.
அதனைத் தொடர்ந்து, இரண்டு கார்களிலிருந்து ஆயுதம் ஏந்திய ஆடவர்கள் வெளிவந்து வேனைக் குறிவைத்துச் சுட்டனர்.
வேனில் இருந்த இரண்டு சிறை அதிகாரிகள் மாண்டனர். அதில் இருந்த மற்ற அதிகாரிகள் காயமடைந்தனர்.
முகம்மது அம்ராவைத் துப்பாக்கிக்காரர்கள் தங்களுடன் கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
மாண்ட சிறை அதிகாரிகளில் ஒருவருக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருப்பதாக பிரெஞ்சு நீதித்துறை அமைச்சர் எரிக் டுபோன்ட் மொரேட்டி தெரிவித்தார்.
உயிரிழந்த மற்றோர் அதிகாரிக்கு 34 வயது என்றும் அவரது மனைவி ஐந்து மாதக் கர்ப்பிணி என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
முகம்மது அம்ராவுக்கு எதிரான திருட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டு மே 10ஆம் தேதியன்று அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
மார்சே நகரில் நிகழ்ந்த கடத்தல் குற்றத்துடனும் அவருக்குத் தொடர்பு இருக்கக்கூடும் என்று பிரெஞ்சு அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அந்தக் கடத்தலில் ஒருவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாகவும் முகம்மது அம்ரா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முகம்மது அம்ராவையும் வேனைத் தாக்கி அதிகாரிகளைக் கொன்றவர்களையும் பிரெஞ்சு அதிகாரிகள் வலைவீசித் தேடுகின்றனர். தேடுதல் பணியில் நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களையும் தப்பி ஓடிய கைதியையும் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தங்களால் ஆன அனைத்தையும் செய்து வருவதாகவும் பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் தெரிவித்தார்.

