இஸ்லாமாபாத்: நில ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மே 15ஆம் தேதியன்று பிணை வழங்கப்பட்டது.
ஆனால் சிறையிலிருந்து வெளியேற அவர் அனுமதிக்கப்படவில்லை.
மேலும் இரண்டு வழக்குகள் தொடர்பாக அவருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை அவர் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக இம்ரான் கானின் வழக்கறிஞர் கூறினார்.
சொத்து மேம்பாட்டாளர் ஒருவரிடமிருந்து இம்ரான் கானும் அவரது மனைவியும் நிலத்தைப் பரிசாகப் பெற்றுக்கொண்டதாகக் கடந்த வாரம் குற்றம் சுமத்தப்பட்டது. இது 2018ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராகப் பதவி வகித்தார்.
நிலத்தைப் பரிசாகப் பெற்றுக்கொண்டு அந்த சொத்து மேம்பாட்டாளருக்குச் சாதகமாக சில நடவடிக்கைகளை இம்ரான் கான் எடுத்ததாக நம்பப்படுகிறது.
தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் மறுத்துள்ளார்.
2018ஆம் ஆண்டில் இம்ரான் கானைச் சட்டவிரோதமான முறையில் திருமணம் செய்துகொண்டது தொடர்பாக அவரது மனைவி புஷ்ரா பீபியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.