யங்கூன்: மியன்மாரில் ராணுவ ஆட்சியை நடத்தி வரும் ராணுவத் தலைவரை ஆசியான் உயர்மட்டத் தலைவர்கள் சந்தித்துள்ளனர்.
தென்-கிழக்கு ஆசிய வட்டார அமைப்பில் மியன்மாரின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
2021ஆம் ஆண்டில் மியன்மாரில் ராணுவப் புரட்சி நடந்ததிலிருந்து அந்நாடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க ராணுவத் தலைவர் அழைக்கப்படுவதில்லை.
பத்து உறுப்பு நாடுகள் கொண்ட ஆசியான் எனும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பு மியன்மார் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பல்வேறு முயற்சிகளை எடுத்தது. இன்று வரை எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. ராணுவப் புரட்சியால் மியன்மார் மக்களில் 2.7 மில்லியன் பேர் இடம் மாறியிருப்பதாக ஐநா கூறியுள்ளது.
மியன்மார் இன்னமும் ஆசியானில் உறுப்பினராக உள்ளது.
ஆனால் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து அமைதித் திட்டத்தில் பங்கேற்காததால் மியன்மார் ராணுவத் தலைவர்கள் ஆசியானின் உச்சநிலை கூட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் ராணுவத் தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹ்லெய்ங், ஆசியானின் சிறப்புத் தூதரான அலுங்கியோ கித்திகோன், தலைமைச் செயலாளர் காவோ கிம் ஹோன் ஆகியோரை தலைநகரில் மே 15ஆம் தேதி சந்தித்துள்ளார்.
ஆசியானுடன் மியன்மாரின் ஒத்துழைப்பு தொடர்பான பிரச்சினைகள் பற்றி அப்போது பேசப்பட்டதாக மியன்மாரின் அதிகாரபூர்வ ஊடகம் தெரிவித்தது.
ஆசியான் கூட்டங்களில் மியன்மார் பங்கேற்கும் சாத்தியம், புதிய தேர்தலுக்கான ராணுவத்தின் திட்டம் உள்ளிட்ட விவகாரங்களும் விவாதிக்கப்பட்டன.
மியன்மார் பிரச்சினை, ஆசியான் நாடுகளுக்கு இடையே பிளவையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகள் மியன்மாரின் ராணுவத் தலைவருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
தாய்லாந்து அதன் வழியில் ராணுவத் தலைவருடனும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூ கியுடனும் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.

