பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின் பிங் தமது நாடும் ரஷ்யாவும் புதுப் பொலிவு பெற தாம் பாடுபடப் போவதாக ரஷ்ய அதிபர் புட்டினிடம் உறுதி கூறியுள்ளார்.
அத்துடன், சீனா என்றுமே ரஷ்யாவுக்கு ஒரு நல்ல பங்காளி நாடாக விளங்கும் என்றும் கூறியதாக சீன நாட்டு ஊடகத் தகவல் தெரிவித்தது.
முன்னதாக, இரு நாள் அதிகாரத்துவ பயணமாக திரு புட்டின் வியாழக்கிழமை (மே 16) அன்று சீனா சென்றார். சீனாவில் ரஷ்ய அதிபர் புட்டின் உக்ரேன் போர், ஆசியா, எரிசக்தி, வர்த்தகம் ஆகியவை குறித்து சீன அதிபர் ஸி ஜின் பிங்குடன் கலந்துரையாடுவார். சீன அதிபர் ஸி, ரஷ்ய அதிபர் புட்டினின் மிக நெருங்கிய அரசியல் ஆதரவாளர், புவிசார் அரசியலில் அமெரிக்காவுக்கு எதிரான ரஷ்யாவின் நட்பு நாடு என்பது நினைவுகூரத்தக்கது.
“சீன-ரஷ்ய நட்புறவு கடுமையான உழைப்பில் விளைந்தது. அது போற்றுதற்குரியது, பாதுகாக்கப்பட வேண்டியது.
“இரு நாடுகளும் வளர்ச்சியடைய, புதுப் பொலிவு பெற ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்றுதல், உலகில் நீதி, நியாயத்தை நிலைநிறுத்த பாடுபட உதவும்,” என்று சீனத் தலைநகர் பெய்ஜிங்கின் மக்கள் மாமண்டபத்தில் உரையாற்றிய திரு ஸி திரு புட்டினிடம் தெரிவித்தார்.
சீனாவும் ரஷ்யாவும் எல்லைகள் இல்லா பங்காளித்துவ நட்புறவு கொண்டுள்ளதாக ரஷ்யா உக்ரேன் மீது படையெடுக்க சில நாள்களுக்கு முன்னர் பிப்ரவரி 2022ஆம் ஆண்டு சீனா சென்றிருந்த திரு புட்டினிடம் திரு ஸி கூறினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவில் நடக்கும் மிகக் கொடூரமான போர் உக்ரேன் போர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு புட்டின் அண்மையில் மீண்டும் ஆறாவது முறையாக ரஷ்ய அதிபராக தேர்வு பெற்றார். அதற்குப் பிறகு தான் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணத்துக்கு சீனாவை அவர் தேர்ந்தெடுத்து இருப்பது உலகில் தான் முக்கியமானதாகக் கருதுவது எது என்பதை உலக நாடுகளுக்கு விளக்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துரைத்துள்ளனர். அத்துடன், அவரது இந்தப் பயணம் அவருக்கும் சீன அதிபர் ஸிக்கும் இடையே நிலவும் நெருக்கமான நட்புமுறையை அது தெளிவுபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஆழமான உறவுகளை பிரதிபலிக்கும் விதமாக அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டனர். அதில் உக்ரேன் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே சரியான முடிவாக இருக்கும் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.