ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் காவல் நிலையத்தில் மே 17ஆம் தேதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், காவலர்கள் இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் அதிகாலை 2 மணியளவில் ஆயுதமேந்தி, உலு திராம் காவல் நிலையத்துக்குச் சென்றதாகக் கூறப்பட்டது.
சந்தேகத்துக்குரிய அந்த ஆடவர் காவல் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரை வெட்டியதாகக் கூறப்பட்டது. அந்தக் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாண்ட காவலரின் துப்பாக்கியை எடுத்து அந்த ஆடவர், சத்தம் கேட்டு ஓடிவந்த மற்றொரு காவலரையும் சுட்டுக் கொன்றதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அந்த இடத்திற்கு விரைந்த மூன்றாவது காவலர், 30களில் இருந்த தாக்குதல்காரரைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருவரின் சடலங்களும் உடற்கூராய்விற்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
தாக்குதலுக்கான நோக்கம் குறித்து மலேசியக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. தாக்குதல்காரர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுவதாகத் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
விரைவில் இச்சம்பவம் குறித்துக் காவல்துறை, அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ‘த ஸ்டார்’ தகவல் வெளியிட்டுள்ளது.
உலு திராம் தாக்குதல் உட்பட உலகளாவிய, வட்டாரப் பாதுகாப்பு நிலவரங்களை அமைச்சும் உள்துறைக் குழுக்களும் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அமைச்சு கூறியது.
உலு திராம் தாக்குதல் குறித்து உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு அதன் மலேசிய சகாக்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சு சொன்னது.