சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் சக்திவாய்ந்த சகோதரியான திருவாட்டி கிம் யோ ஜோங், ரஷ்யாவுடன் ஆயுதப் பரிமாற்றங்கள் நடைபெறுவதாகக் கூறப்படுவதை மறுபடியும் மறுத்துள்ளார்.
வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகமான கேசிஎன்ஏ மே 17ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டது.
நாட்டிற்காக அண்மையில் உருவாக்கப்பட்ட, மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள் விற்பனைக்கு அல்ல என்று திருவாட்டி கிம் தெரிவித்தார்.
உக்ரேனுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக ரஷ்யாவுடன் வடகொரியா ஆயுதங்களை பரிமாறிக் கொள்கிறது என்று அமெரிக்காவும் தென்கொரியாவும் குற்றம் சாட்டுகின்றன.
இதனை வடகொரியாவும் ரஷ்யாவும் மறுத்துள்ளன. ஆனால் இரு நாடுகளும் ராணுவ ஒத்துழைப்பைப் பலப்படுத்த உறுதி பூண்டுள்ளன.
கடந்த செப்டம்பரில் திரு கிம் அரிய பயணம் மேற்கொண்டு ரஷ்யாவுக்குச் சென்றிருந்தார். உச்சநிலை மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினையும் அவர் சந்தித்தார். அதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது.
ஆனால் வடகொரியா-ரஷ்யா ஆயுத ஒப்பந்தம் பற்றிய எண்ணம் தப்பானது, கற்பனையானது, அர்த்தமில்லாதது என்று திருவாட்டி கிம் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்திருப்பதாக கேசிஎன்ஏ கூறியது.
விரோத சக்திகள் தவறான வதந்தியை பரப்புவதாகவும் திருவாட்டி கிம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“வடகொரியாவின் ஆயுதங்கள் ஏற்றுமதிக்கு அல்ல. தென்கொரியாவிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அவை இருக்கின்றன,” என்றார் அவர்.

