தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘துப்பாக்கிகளைக் கைப்பற்ற ஜமா இஸ்லாமியா அமைப்பினர் மேற்கொண்ட முயற்சி’

3 mins read
ஜோகூர் காவல் நிலையத் தாக்குதல் குறித்து அரச மலேசிய காவல்துறைத் தலைவர்
c900d887-d35f-44b5-b42e-bb3cc0f05576
மலேசியக் காவல்துறையின் தலைமைக் கண்காணிப்பாளர் ரஸாருதின் ஹுசேன், உலு திராம் காவல் நிலையத்தில் தாக்குதல் நடந்த இடத்தைச் சோதனையிட்டார். - படம்: மலாய்மெயில்
multi-img1 of 2

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் காவல் நிலையத்தில் உள்ள ஆயுதங்களைக் கைப்பற்ற ஜமா இஸ்லாமிய உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் ஆடவர் தாக்குதல் நடத்தியதாக அரச மலேசியக் காவல்துறைத் தலைவர் ரஸாருதின் ஹுசேன் கூறியுள்ளார்.

மே 17ஆம் தேதி அதிகாலை தாக்குதலில் காவல்துறையினர் இருவர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய அந்த ஆடவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அந்த ஆடவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள், அது திட்டமிட்ட சதி என்பதைக் காட்டுவதாக காவல்துறைத் தலைவர் கூறினார்.

“சந்தேக நபர் காவல்துறையினருடன் சண்டையிடத் தயாராக, ஒரு பையில் கவசம் உள்ளிட்ட சில பொருள்களைக் கொண்டுவந்திருந்தார்.

“அவரது நோக்கம் காவல்துறையினரின் துப்பாக்கிகளைப் பறித்துச் செல்வது என்று விசாரணையாளர்கள் நம்புகின்றனர். பிற்காலத்தில் அதைத் தங்கள் சதித்திட்டத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைத்திருக்கக்கூடும்,” என்றார் அவர்.

“ஜோகூரில் உள்ள ஜமா இஸ்லாமியா உறுப்பினர்களை அடையாளம் கண்டு, கைது செய்யும்படி காவல்துறையின் சிறப்புப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளோம்,” என்று செய்தியாளர் கூட்டத்தில் திரு ரஸாருதின் கூறினார்.

ஜோகூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் எம். குமாரும் இதர மூத்த அதிகாரிகளும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஜமா இஸ்லாமியா பயங்கரவாதக் குழு, இந்தோனீசியாவைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 2002ல் நடந்த பாலி குண்டுவெடிப்பிற்கு அந்த அமைப்பே காரணம் என்று கருதப்படுகிறது.

உயர்கல்வி மாணவர்களான ஓர் ஆடவரும் ஒரு பெண்ணும் ஈராண்டுகளுக்குமுன் நடந்த மானபங்கச் செயல் குறித்துப் புகாரளிக்க மே 17ஆம் தேதி அதிகாலை உலு திராம் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்ததாகத் திரு ரஸாருதின் கூறினார்.

அப்போது வெட்டுக்கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த சந்தேக நபர், காவல் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த காவலரின் கழுத்தில் சிலமுறை வெட்டினார்.

மாண்ட காவலரின் துப்பாக்கியை எடுத்து அந்த ஆடவர், சத்தம் கேட்டு ஓடிவந்த மற்றொரு காவலரையும் சுட்டுக் கொன்றதாகத் தகவல்கள் கூறுகின்றன. மாண்ட காவலர்கள் இருவரும் முறையே 21, 22 வயதினர் என்று கூறப்பட்டது.

அந்த இடத்திற்கு விரைந்த மூன்றாவது காவலர், 30களில் இருந்த தாக்குதல்காரரைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கிச்சூட்டின்போது அந்தக் காவலரும் காயமடைந்ததாகக் கூறப்பட்டது.

மூவரின் சடலங்களும் உடற்கூராய்விற்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

சம்பவத்தை அடுத்து, ஏழு பேரைக் கைது செய்துள்ளதாகவும் அவர்கள் 19 வயதிற்கும் 62 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் திரு ரஸாருதின் கூறினார். புகாரளிக்கச் சென்றிருந்த இளையர்களும் அவர்களில் அடங்குவர்.

முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபரின் தந்தை உலு திராமில் உள்ள ஜமா இஸ்லாமியா பிரிவின் உறுப்பினர் எனத் தெரியவந்துள்ளது. ஜோகூரில் செயல்படும் மேலும் 20 உறுப்பினர்களைக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

தாக்குதலுக்கான நோக்கம் குறித்து மலேசியக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. தாக்குதல்காரர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுவதாக ‘த ஸ்டார்’ தகவல் வெளியிட்டுள்ளது.

மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்குத் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

வன்செயல்கள் மூலம் கொலை செய்வோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்