பாசிர் குடாங்: ஜோகூரின் உலு திராம் காவல் நிலையத்தில் மே 17ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எழுவரில் ஒருவர் சிங்கப்பூரர் என்று வெளியான தகவலை மலேசிய காவல்துறைத் தலைவர் ரஸாருதீன் ஹுசைன் மறுத்து உள்ளார்.
சிங்கப்பூரரான 65 வயதுப் பெண் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றார் அவர்.
“தடுத்து வைக்கப்பட்டு உள்ள எழுவரும் மலேசியக் குடிமக்கள்,” என்று மலேசியாவின் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் அவர் கூறினார்.
அந்த எழுவரும் மே 18 முதல் 24ஆம் தேதி வரை, மாவட்டக் காவல்துறைத் தலைமையகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொலைக் குற்றம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஐவர், தாக்குதல்காரரின் குடும்ப உறுப்பினர்கள். மேலும் இருவர் உயர்கல்வி நிலைய மாணவர்கள். அனைவரும் 19 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இதற்கிடையே, தாக்குதல்காரர் ஜமா இஸ்லாமிய அமைப்புடன் தொடர்புடையவர் என்றாலும் சம்பவத்தன்று தனிப்பட்ட முறையில் செயல்பட்டதாக நம்பப்படுகிறது என்று மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியன் இஸ்மாயில் கூறியுள்ளார்.
“40க்கு மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சந்தேகத்துக்குரியவரின் வீட்டில் சோதனையிடப்பட்டது. இவற்றின் அடிப்படையில் அந்த ஆடவர் தனித்துச் செயல்பட்டதாகத் தெரிகிறது,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
ஜோகூர் மாநிலக் காவல்துறைத் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
இவ்வேளையில், உலு திராம் காவல் நிலையத் தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாகித் ஹமிடி கூறியுள்ளார்.
இத்தகைய அதிர்ச்சியூட்டும் சம்பவங்களைத் தடுக்க, அரச மலேசிய காவல்துறையும் தேசியப் பாதுகாப்பு மன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தீவிரவாதத்துக்கு எதிரான மலேசியாவின் கொள்கை உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகக் கூறிய அவர், பயங்கரவாதம் இடம்பெறாத பகுதியாக நாடு விளங்குவதையும் மலேசியாவின் பல்வேறு இனங்கள், சமயங்களுக்கு இடையில் நல்லிணக்கம் நிலவுவதையும் உறுதிசெய்ய வேண்டும் என்றார்.
உலு திராம் தாக்குதல் தொடர்பில் காவல்துறையின் விரைவான நடவடிக்கையை மலேசியத் துணைப் பிரதமர் பாராட்டினார்.

