கோலாலம்பூர்: மலேசியத் தலைநகரான கோலாம்பூரில் இருக்கும் மலேசிய மன்னரின் அதிகாரபூர்வ இல்லமான இஸ்தானா நெகாராவுக்குள் இருவர் காரில் ஆயுதத்துடன் அத்துமீறி நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (மே 17) மாலை 4.40 மணியளவில் நடந்ததாகவும் அவர்கள் நுழைவாயில் எண் மூன்று வழியாக ஜாலான் துவான்கு அப்துல் ஹலிம் அரண்மனை வளாகத்திற்குள் நுழைய முயன்றதாகவும் கோலாலம்பூர் காவல்துறை உயரதிகாரி ருஸ்டி முகமது இசா கூறினார்.
மேலும், அவர்கள் இருவரையும் காவல்துறையினர் அரண்மனைக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர் என்றும் அவர் கூறினார்.
காருக்குள் இருந்த இருவரும் மலேசிய மன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தரை சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தனர் எனவும் அவர்களுடைய வாகனத்தைச் சோதனையிட்டதில் அவர்களிடம் கத்தி போன்ற பயங்கர ஆயுதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் திரு ருஸ்டி தெரிவித்தார்.
“கைதுசெய்யப்பட்ட இருவரும் உள்ளூர்வாசிகள். அவர்கள் இருவரும் 29, 37 வயதினர்,” என அவர் கூறினார்.
அவர்கள் இருவரும் மே 21ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
மேலும், இந்த விவகாரம் குறித்துத் தவறான தகவல்கள் எதையும் பரப்ப வேண்டாம் என அவர் அனைவரையும் கேட்டுகொண்டார்.

