அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமளி துமளி

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமளி துமளி

1 mins read
ஒப்பனை குறித்த கிண்டல், உருவகேலியில் ஈடுபட்ட மன்ற உறுப்பினர்கள்
87bd63d2-b608-48ad-a07f-9605403ecb2d
ஜேஸ்மின் குரோக்கெட் (இடம்), மர்ஜோரி டெய்லர் கிரீன். - படங்கள்: நியூயார்க்டைம்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மே 16ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் நிலவின.

மன்ற உறுப்பினர்கள், மற்ற உறுப்பினர்களின் ஒப்பனை, தலைச்சாயம், உடலமைப்பு போன்றவற்றைக் கேலியும் கிண்டலும் செய்தனர்.

இது, தொடக்கப் பள்ளிச் சிறார்களிடையேகூட அனுமதிக்கப்படாத நடத்தை என்று கவனிப்பாளர்கள் சுட்டிக்காட்டினர். இவ்வாறு நடந்துகொண்டிருந்தால் அக்குழந்தைகள் தற்காலிகமாகப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டிருப்பர் என்று அவர்கள் கூறினர்.

தலைமைச் சட்ட அதிகாரி மெர்ரிக் கார்லண்ட் மீது, நாடாளுமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு கொண்டுவருவது தொடர்பில் வாக்களிக்கக் கூடியிருந்த மன்ற உறுப்பினர்கள் இவ்வாறு சச்சரவில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, குடியரசுக் கட்சியின் மர்ஜோரி டெய்லர் கிரீன், ஜனநாயகக் கட்சியின் ஜேஸ்மின் குரோக்கெட் செயற்கையான கண் இமை முடியைப் பொருத்தியிருப்பது குறித்துக் கிண்டல் செய்தார்.

ஜனநாயகக் கட்சித் தரப்பு பதிலடி தந்ததுடன் அவைக் குறிப்பிலிருந்து கிரீனின் சொற்களை நீக்கக் கோரியது. அவ்வாறு செய்தால் அதன் பிறகு அன்றைய கூட்டத்தில் திருவாட்டி கிரீன் மேற்கொண்டு பேச இயலாது.

பலத்த வாதத்துக்குப் பிறகு அதற்கு ஒப்புக்கொண்ட கிரீன், தாம் மன்னிப்புக் கோரப் போவதில்லை என்றார்.

திருவாட்டி குரோக்கெட் தாமும் சளைத்தவரில்லை என்பதைக் காட்டும் விதமாக ஒருவரின் உருவ அமைப்பைக் குறித்துப் பேசினால் தவறாகக் கருதப்படாது அல்லவா என்று பிரதிநிதிகள் சபைப் புலனாய்வுக் குழுத் தலைவர் ஜேம்ஸ் கோமரிடம் வினவினார்.

இவ்விதமாக, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரசாரமான சொற்களைப் பரிமாறிக்கொண்டது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காநாடாளுமன்ற உறுப்பினர்உருவகேலி