மவுண்ட் இபு எரிமலை வெடிப்பு: கிராமவாசிகள் வெளியேற்றம்

மவுண்ட் இபு எரிமலை வெடிப்பு: கிராமவாசிகள் வெளியேற்றம்

1 mins read
dce9aa96-bd72-4a53-87f0-3e53ae02d14e
இந்தோனீசியாவின் ஹால்மஹேரா தீவில் இருக்கும் மவுண்ட் இபு எரிமலை புகை, கற்கள், எரிமலைக் குழும்பு ஆகியவற்றை நான்கு கிலோ மீட்டர் உயரத்துக்குக் கக்கியது. எரிமலைவாய் அருகில் ஊதா நிறத்திலான மின்னல்கள் வெட்டின. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஹால்மஹேரா தீவில் இருக்கும் மவுண்ட் இபு எரிமலை வெடித்ததில் அதைச் சுற்றி உள்ள ஏழு கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டிருப்பதாக இந்தோனீசிய அதிகாரிகள் மே 19ஆம் தேதியன்று தெரிவித்தனர்.

இந்தோனீசிய நேரப்படி மே 18ஆம் தேதி மாலை மவுண்ட் இபு எரிமலை வெடித்தது.

புகை, கற்கள் எரிமலைக் குழும்பு ஆகியவற்றை அது நான்கு கிலோமீட்டர் உயரத்துக்குக் கக்கியது.

அதுமட்டுமல்லாது, எரிமலைவாய் அருகில் ஊதா நிறுத்திலான மின்னல்கள் வெட்டியதாகவும் இந்தோனீசிய எரிமலை ஆய்வகம் கூறியது. இதுதொடர்பான படங்களை அது வெளியிட்டது.

எரிமலைக்கு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து மக்களைப் பத்திரமாக வெளியேற்றும் பணியில் காவல்துறையினர், ராணுவத்தினர், மீட்புப் பணியாளர்கள் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

வெளியேற்றப்பட்டோர் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

எரிமலையைச் சுற்றி ஏழு கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் இருப்போர் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகள் பரிந்துரைத்திருந்தனர்.

மே மாதம் தொடக்கத்தில் மவுண்ட் இபு எரிமலை பலமுறை குமுறியதை அடுத்து, அதுதொடர்பான விழிப்புநிலை உயர்த்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்