தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரது குடும்பத்தினருக்கு அஞ்சலி நிகழ்வு சனிக்கிழமை (மே 18) டென்மார்க்கில் நடைபெற்றது.
பிரபாகரனின் சகோதரன் மனோகரனின் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. டென்மார்க்கில் உள்ள DGI HUSET VEJLE மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இனக்கலவரம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை பிரபாகரனுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ எவ்வித அஞ்சலிகளும், நினைவேந்தல்களும் நடத்தப்பட்டதில்லை.
முதன்முறையாக இந்த ஆண்டு ஐரோப்பிய நாடொன்றில் பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்தினருக்கு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் இறுதிப்போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையிலான நினைவேந்தல் நிகழ்வுகள் சனிக்கிழமை (மே 18) இலங்கையில் வட, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் நடந்தன. பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் முற்றத்தில் நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மூன்றாவது ஆண்டாக கொழும்பில் நடைபெற்றது.
இலங்கையின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சனிக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் போரில் கணவரை இழந்த முள்ளியவளையைச் சேர்ந்த பெண்ணொருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அவரைத் தொடர்ந்து, ஏனையவர்களும் தங்கள் உயிரிழந்த உறவுகளை நினைத்து சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
அதன் பின்னர், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு சமயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அனைத்துலக மன்னிப்பு மன்றத்தின் தலைமைச் செயலாளர் ஏக்னஸ் கலமார்ட் நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, உரையாற்றினார்.
தெற்காசியாவிற்கு முதல் முறையாக வருகையளித்திருக்கும் ஏக்னெஸ், இலங்கையில் மே 24ஆம் தேதி வரை தங்கியிருப்பார்.
இதற்கிடையே இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் முடிவை நினைவு கூரம் இந்தத் தினத்தில் வெறுப்புக்கு பதிலாக அன்பை பகிர்வோம் என்று இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, மே 18 ஆம் தேதி போர் நினைவு நாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“போர் என்பது வெற்றியல்ல, அது நாடு அல்லது மனித குலத்துக்கு தோல்வியாகும். 30 ஆண்டுகால இனப்போராட்டம் காரணமாக நாடு பலவற்றை இழந்தது.”
“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தாய்மார் தங்களின் பிள்ளைகளை இழந்தனர். அதேபோல் பிள்ளைகள் தமது பெற்றோரை இழந்தனர். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் நாம் பிளவடைந்துள்ளோம்.
“இந்தப் போரின் காரணமாக நான் எனது கண்ணை இழந்தேன். மேலும் பல இழப்புகளை எதிர்கொண்டேன். இறுதிப் போரின் முடிவை நினைவுகூரும் இன்றைய தினத்தில் வெறுப்புக்கு பதிலாக அன்பை பகிர்வோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், இலங்கையில் போர் முடிந்து 15 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அனைத்து இலங்கை மக்களுடன் அமெரிக்கா துணை நிற்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை முன்னிட்டு ஜுலி சங் தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்காலத்திற்கான உறுதியையும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் வகையில் அமெரிக்கா தொடர்ந்து இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதி, சம உரிமை, வாய்ப்புகளுக்காக போராடுபவர்களுடன் உறுதியான பங்காளியாக அமெரிக்கா தொடர்ந்து இருக்கும். அத்துடன், நிலையான சமாதானம், முன்னேற்றத்திற்கான பன்முகத்தன்மையை உள்ளடக்கிய வளமான எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு ஆதரவளிப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.