எவரெஸ்ட் மலையில் காணாமல் போன மலையேறிகள்: இருவரின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன

1 mins read
09f00069-7009-427a-bdeb-d09785c1538a
மாண்ட இருவரும் வழிகாட்டிகளின் உதவியின்றி மலையேறியதாகவும் அவர்கள் பயன்படுத்திய அலைபேசிகள் அவர்களது கூடாரத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. - படம்: இபிஏ

காத்மாண்டு: எவரெஸ்ட் மலையில் ஏறிய இரண்டு மங்கோலியர்கள் காணாமல் போனதை அடுத்து, அவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

இந்நிலையில், 53 வயது திரு உசுக்ஜர்கல் சிடென்டம்பாவின் சடலம் மே17ஆம் தேதியன்று 8,600 மீட்டர் உயரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

காணாமல் போன இரண்டாவது மலையேறியான 31 வயது திரு பெரேவ்சுரன் காஜ்வஜாவின் சடலமும் அதே நாளன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது உடல் 8,400 மீட்டர் உயரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடுமையான வானிலை காரணமாக தேடுதல் பணிகள் தடைப்பட்டும் இரண்டு பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேப்பாள அதிகாரிகள் தெரிவித்தனர்.

சடலங்களை மலையிலிருந்து கீழே கொண்டு வர முயற்சி செய்வதாக எவரெஸ்ட் மலையில் ஏற அந்த இருவருக்கும் அனுமதியைப் பெற்றுத் தந்து ஏற்பாடுகளைச் செய்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இருவரும் வழிகாட்டிகளின் உதவியின்றி மலையேறியதாகவும் அவர்கள் பயன்படுத்திய அலைபேசிகள் அவர்களது கூடாரத்தில் இருந்ததாகவும் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

மே 13ஆம் தேதி காலை அவர்கள் இருவரும் எவரெஸ்ட் மலையின் சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததைச் சில மலையேறிகள் பார்த்ததாக நேப்பாள சுற்றுப்பயணத்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்