தென்கொரியாவில் 180க்கும் அதிகமான பூனைகள் மடிந்தன; மர்மம் நீடிக்கிறது

தென்கொரியாவில் 180க்கும் அதிகமான பூனைகள் மடிந்தன; மர்மம் நீடிக்கிறது

2 mins read
8b3c5d71-d10d-40a1-a6e6-fcd25975d389
பூனைகளுக்கு நரம்பு மற்றும் தசை தொடர்பான நோய்கள், கடுமையான காய்ச்சல், கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு ஆகியவை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சோல்: தென்கொரியாவில் 180க்கும் அதிகமான பூனைகள் மடிந்துள்ள நிலையில், அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இதன் காரணமாக பூனைகளைச் செல்லப் பிராணியாக வளர்ப்பவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

மடிந்த பூனைகள் அனைத்தும் ஒரே நிறுவனம் தயாரித்த உணவைச் சாப்பிட்டதாக தென்கொரிய விலங்கு ஆர்வலர் குழுக்களான லைஃப் மற்றும் மியோன் தெரிவித்தன.

ஜனவரி மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை அந்த நிறுவனம் தயாரித்த உணவை சாப்பிட்ட மொத்தம் 513 பூனைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பூனைகளிடம் ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்பட்டதாக அவ்விரு விலங்கு ஆர்வலர் குழுக்களும் கூறின.

சம்பந்தப்பட்ட பூனைகளுக்கு நரம்பு மற்றும் தசை தொடர்பான நோய்கள், கடுமையான காய்ச்சல், கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு ஆகியவை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவற்றில் 181 பூனைகள் மடிந்தன.

இதற்கிடையே, பூனைகள் மடிந்ததற்கும் அந்த நிறுவனம் தயாரித்த உணவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தென்கொரிய விவசாய, உணவு, கிராமப்புற அமைச்சு கூறியது.

50க்கும் அதிகமான செல்லப் பிராணிகள் உணவு மாதிரிகளை அமைச்சு சோதனையிட்டது.

பூனை வளர்ப்பவர்கள் சந்தேகப்படும் உணவும் அதில் அடங்கும்.

மடிந்த 10 பூனைகளும் பரிசோதிக்கப்பட்டன.

ஆனால் அவற்றின் மரணத்துக்கான காரணம் உறுதியாகத் தெரியவில்லை.

விசாரணையும் மருத்துவப் பரிசோதனையும் தொடரும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

மற்ற பூனைகளுக்கு இப்படியொரு நிலை ஏற்படாதிருக்கத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளைக் கண்டுபிடிக்க நிபுணர்களுடன் இணைந்து செயல்பட இருப்பதாக அது கூறியது.

நிலைமையை மிக அணுக்கமாகக் கண்காணிக்க இருப்பதாக அமைச்சு தெரிவித்தது.

அமைச்சு வெளியிட்ட இந்தக் கருத்துகள் குறித்து பூனைகளைச் செல்லப் பிராணியாக வளர்த்து வருவோர் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளனர்.

“பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க தற்போது நடப்பில் இருக்கும் அணுகுமுறை போதுமானதாக இருக்காது என நம்புகிறோம்,” என்று லைஃப் விலங்கு ஆர்வலர் குழுவின் தலைவர் திரு ஷிம் இன் சியோப் கூறினார்.

இந்நிலையில், பூனைகளைச் செல்லப் பிராணியாக வளர்ப்பவர்கள் இணைந்து குழு ஒன்றை அமைத்து, பூனைகள் மடிந்ததற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க தென்கொரிய அரசாங்கம் அனைத்துலக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

குறிப்புச் சொற்கள்