ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் பினாங்கு நகரில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் அத்துமீறி நுழைந்த ஆடவர் ஒருவர், அங்கிருந்த காவலர் வைத்திருந்த இயந்திரத் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு ஓட முயற்சி செய்தார்.
டத்தோ கெரமாட் காவல் நிலையத்தில் மே 19ஆம் தேதி அதிகாலையில் நடந்த அந்தச் சம்பவம் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது.
35 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் டத்தோ கெரமாட் காவல்நிலையத்தில் நுழையும்போது அங்கே பணியில் இருந்த காவலர் ஒருவரைப் பார்த்து, கெட்டவார்த்தைகளால் திட்டியபடி உள்ளே நுழைந்தார்.
அப்போது, இங்கே பிரச்சினைகள் ஏதும் செய்யாமல் வெளியேறிவிடும்படி அந்தக் காவலர் எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், அந்தக் காவலரை நோக்கி விரைந்து நெருங்கி வந்த அந்த ஆடவர், காவலர் வைத்திருந்த இயந்திரத் துப்பாக்கியைப் பறிக்க முயன்றார்.
அந்த ஆடவர் மதுபோதையில் இருந்ததால் காவலர்கள் விரட்டியடித்தனர். ஆனால் அந்த ஆடவரோ, தலைக்கவசம் ஒன்றை எடுத்துவந்து காவலர்களைத் தாக்க முயற்சி செய்தபோது ஏற்பட்ட கைகலப்பில் அந்த ஆடவருக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர், காவலர்கள் அவரைக் கைதுசெய்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய பினாங்கு காவல்துறைத் தலைவர் ஹம்ஸா அஹ்மது, கைதுசெய்யப்பட்ட அந்த சந்தேகப் பேர்வழி மீது ஏற்கெனவே இரண்டு குற்றவியல் வழக்குகளும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளும் உள்ளன. ஆனால், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் சோதனை அறிக்கையின்படி அவர் போதைப்பொருள் புழங்கியதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
அந்த ஆடவர் மேல் விசாரணைக்காக மே 22ஆம் தேதி தடுத்து வைக்கப்படுவார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. அவர் மீது, அரசாங்க ஊழியரை அச்சுறுத்தியது, காவல்நிலையத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.