தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ஈரான் அதிபர் மாண்டார்

3 mins read
2660df72-dffd-4743-9c7a-14ca7165f1a8
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 3
மீட்கப்பட்ட சடலத்துடன் மீட்புப் பணி அதிகாரிகள்.
மீட்கப்பட்ட சடலத்துடன் மீட்புப் பணி அதிகாரிகள். - படம்: ஏஎஃப்பி

தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அவர் மாண்டுவிட்டதாக ஈரான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு அசர்பைஜானில் மூடுபனி நிறைந்த மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது அது விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகளும் ஈரானின் அரசாங்க ஊடகமும் தெரிவித்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து அதிகாரபூர்வத் தகவல் ஏதும் இல்லை.

அந்த ஹெலிகாப்டரில் 63 வயது அதிபர் ரைசியுடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் உசேன் அமீர் அப்துல்லாஹினும் மேலும் ஆறு பயணிகளும் சிப்பந்திகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. கிழக்கு அசர்பைஜான் ஆளுநரும் தப்ரிஸ் நகர மூத்த இமாமும் மாண்டோரில் அடங்குவர்.

மே 19ஆம் தேதி விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் சிதைவுகள் கருகிய நிலையில் மே 20ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டன.

முன்னதாக, ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் மாண்டுவிட்டதாகப் பெயர் தெரிவிக்க விரும்பாத ஈரானிய அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

அதிபர் ரைசியின் மரணம் குறித்து ஈரானியத் துணை அதிபர் மொசேன் மன்சூரி சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

அதிபர் ரைசி சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டருடனான தொடர்பைக் கட்டுப்பாட்டு நிலையம் இழந்ததை அடுத்து, அவரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

ஹெலிகாப்டர் விழுந்தாக நம்பப்படும் இடத்தை துருக்கிக்குச் சொந்தமான ஆளில்லா வானூர்தி கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அவ்விடத்துக்கு விரைந்த மீட்புப் பணி அதிகாரிகள் ஹெலிகாப்டரின் பாகங்களைக் கண்டுபிடித்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

ஹெலிகாப்டர் தீக்கு இரையானதாக அதிகாரிகள் கூறினர்.

கடுமையான வானிலை காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள சிரமமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிபர் ரைசியைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஈரானின் தலைமைத்துவம் குறித்து அந்நாட்டு மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று அந்நாட்டின் உயரிய தலைவர் அயத்தோலா அலி காமெனி தெரிவித்திருந்தார். ஈரான் எவ்வித தங்குதடையுமின்றி எப்போதும் போலச் செயல்படும் என அவர் உறுதி அளித்தார்.

அதிபர் ரைசியைத் தேடும் பணியில் உதவ ஈராக், குவைத், கத்தார், சவூதி அரேபியா, சிரியா, துருக்கி, ஐரோப்பிய ஒன்றியம் உட்படப் பல நாடுகள் முன்வந்தன. ரஷ்யாவும் மீட்புப் பணி அதிகாரிகளை அனுப்ப முன்வந்தது.

இதற்கிடையே, அதிபர் ரைசியின் மரணம் மனவேதனையை அளிப்பதாகத் தெரிவித்த ஹமாஸ் அமைப்பு, ஈரானியர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டது. லெபனானின் ஹிஸ்புல்லா குழுவினரும் ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

2021ஆம் ஆண்டு பதவியேற்ற அதிபர் ரைசி ஈரானின் அடுத்த உயரிய தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அவர் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.

அதிபர் ரைசியின் மரணத்தை அடுத்து, ஈரானில் ஐந்து நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டின் உயரிய தலைவர் அலி காமெனி அறிவித்துள்ளார்.

இடைக்கால அதிபராக, முதல் துணை அதிபர் முகம்மது மொக்பெர் நியமிக்கப்பட்டுள்ளார். திரு ரைசியைப் போன்றே இவரும் திரு காமெனிக்கு அணுக்கமானவர் என்று கூறப்படுகிறது.

ஈரானின் அரசமைப்புச் சட்டத்தின்கீழ், பதவியிலிருக்கும் அதிபர் ஒருவர் உயிரிழந்தால், உயரிய தலைவரின் ஒப்புதலுக்குப்பின், முதல் துணை அதிபர் 50 நாள்களுக்கு இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்க வேண்டும். 50 நாள்களுக்குப் பிறகு அடுத்த அதிபரைத் தெரிவுசெய்யத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதிபர் ரைசியின் மரணத்துக்கு திரு காமெனி தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்