ஜோகூர் பாரு: ஜோகூரின் உலு திராம் நகரில் உள்ள காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அம்மாநிலத்தின் சுற்றுப்பயணத்துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்று மலேசிய சுற்றுப்பயணத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் இன்னும் சில நாள்களில் பள்ளி விடுமுறை தொடங்கிடும் என்றும் முன்பதிவுகளை ஜோகூர் ஹோட்டல்கள் எதிர்பார்ப்பதாகவும் மலேசிய ஹோட்டல்கள் சங்கத்தின் ஜோகூர் மாநிலப் பிரிவுத் தலைவர் திரு ஐவன் டியோ கூறினார்.
குறிப்பாக, சிங்கப்பூரிலிருந்து ஜோகூருக்குப் பயணம் மேற்கொள்ளும் பல சிங்கப்பூரர்கள் ஜோகூர் ஹோட்டல்களில் தங்குவர் என்றார் அவர்.
“உலு திராம் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒருமுறை மட்டும் நடத்தப்பட்ட தனிச் சம்பவம். அது ஜோகூர் சுற்றுப்பயணத்துறையைப் பாதிக்காது,” என்றார் திரு டியோ.
எல்லைப் பகுதியில் சிங்கப்பூர் அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளை முடுக்கிவிட்டிருப்பது பற்றியும் சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
சிங்கப்பூரர்கள் ஜோகூருக்குப் பயணம் மேற்கொள்வதற்கு இவை தடைக்கற்களாக இருக்காது என்று திரு டியோ கூறினார்.
உலு திராமில் தாக்குதல் காரணமாக சுற்றுப்பயணிகள் தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்யவில்லை என்றார் அவர்.
“சிங்கப்பூரில் விலைவாசி அதிகம். இந்தோனீசியா, தாய்லாந்து, வியட்னாம் போன்ற நாடுகளுக்கு விடுமுறைப் பயணம் மேற்கொள்ள சிங்கப்பூரர்கள் விரும்புகின்றனர். குறிப்பாக, அதிகமான சிங்கப்பூரர்கள் ஜோகூருக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.
தொடர்புடைய செய்திகள்
“சீனாவிலிருந்து பேரளவில் சுற்றுப்பயணிகள் ஜோகூருக்குப் பயணம் மேற்கொண்டு இங்குள்ள ஹோட்டல்களில் தங்குவர் என்றும் எதிர்பார்க்கிறோம். மலேசியாவுக்கு வர சீன நாட்டவர்களுக்கு விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்,” என்றார் திரு டியோ.

