புதுடெல்லி: ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அவர் மரணமடைந்தார்.
அவரது மரணச் செய்தி வெளியானதை அடுத்து, உலகத் தலைவர்கள் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
அதிபர் ரைசியின் மரணச் செய்தியைக் கேட்டு தாம் அதிர்ச்சி அடைந்ததாகவும் மீளாத் துயரில் ஆழ்ந்திருப்பதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மே 20ஆம் தேதியன்று தெரிவித்தார்.
“அதிபர் ரைசியின் குடும்பத்தினருக்கும் ஈரானிய மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். சோகம் நிறைந்த இத்தருணத்தில் ஈரானுக்கு இந்தியா துணையாக நிற்கிறது,” என்று எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டார்.
அதிபர் ரைசியின் மரணம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கரும் அதிர்ச்சி தெரிவித்தார்.
பாகிஸ்தானியப் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப்பும் ஈரான் மக்களுக்குத் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார். அதிபர் ரைசியின் மரணத்தால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“பல வரலாற்றுப் பெருமைகளைக் கொண்ட ஈரான் இந்தப் பின்னடைவிலிருந்தும் அதற்கே உரிய துணிச்சலுடன் மீண்டு வரும்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பல்லாண்டு காலமாகவே ஈரானுடன் நெருங்கிய உறவு இருந்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவுக்குப் பேரளவில் எரிபொருள் விற்பனை செய்த நாடாக ஈரான் இருந்து வந்தது.
ஆனால் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தடைகள் விதித்ததை அடுத்து, இது பெரிதும் பாதிப்படைந்தது.
ஈரானின் சபஹார் துறைமுகத்தை மேம்படுத்தும் உரிமையை இந்தியாவுக்கு ஈரான் கடந்த வாரம் தந்தது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் அந்தத் துறைமுகத்தை பத்து ஆண்டுகளுக்குப் பயன்படுத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது.
சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் ஈரானுக்குத் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
அதிபர் ரைசியின் மரணம் ஈரானியர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றார் அவர்.
ஒரு நல்ல நண்பரை சீனா இழந்துவிட்டதாக அதிபர் ஸி கூறினார்.
அதிபர் ரைசியின் மரணம் தம்மைத் துயரில் ஆழ்த்தியிருப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
“மலேசியா-ஈரான் உறவை வலுப்படுத்த நாங்கள் இருவரும் விரும்பினோம். இருநாட்டு மக்கள் மற்றும் இஸ்லாமிய நாடுகளின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படத் திட்டமிட்டோம். எங்கள் விருப்பம் நிறைவேறும்,” என்று திரு அன்வார் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
ரஷ்யா, கத்தார், ஈராக், ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளும் அவற்றின் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டன.
ஈரானின் ஆதரவுடன் லெபனானிலிருந்து செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு, அதிபர் ரைசியை இஸ்ரேல் எதிர்ப்பு நாடுகளைப் பாதுகாத்தவர் என்று வர்ணித்துப் புகழாரம் சூட்டியது.
அதிபர் ரைசியின் மரணம் மனவேதனையை அளிப்பதாகத் தெரிவித்த ஹமாஸ் அமைப்பு, ஈரானியர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டது.
ஹூதிப் படையின் தலைவர் முகம்மது அலி அல் ஹூதியும் ஈரானியர்களுக்குத் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
ஹூதிப் படைக்கு ஈரான் ஆதரவு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

