ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலச் சமய அதிகாரிகள், உலு திராம் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட மதரசா லுக்மானுல் ஹக்கிம் பள்ளியை இடிப்பது குறித்துப் பரிசீலிக்கவிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு மூடப்பட்ட அப்பள்ளி, இஸ்லாமியப் போராளிகளின் ஆட்சேர்ப்புக்கு முன்னர் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அந்தப் பள்ளி இப்போது செயல்படவில்லை என்பதை ஜோகூர் இஸ்லாமிய சமய மன்றமும் காவல்துறையும் உறுதிசெய்திருப்பதாக ஜோகூர் மாநில இஸ்லாமிய சமய விவகாரங்கள் குழுத் தலைவர் முகமது ஃபரிட் முகமது காலிட் கூறினார்.
“அந்த மதரசா பள்ளி இன்னும் செயல்படுவதாக உள்ளூர்வாசிகள் சிலர் புகாரளித்தனர்.
“கடந்த வெள்ளிக்கிழமை உலு திராம் காவல் நிலையம் தாக்கப்பட்டதை அடுத்து உள்ளூர்வாசிகள் இவ்வாறு கவலை தெரிவித்துள்ளனர்.
“இருப்பினும் அந்தக் கட்டடம் இப்போது பயன்பாட்டில் இல்லை என்பதையும் அதைப் பயன்படுத்த யாரும் விண்ணப்பிக்கவில்லை என்பதையும் என்னால் உறுதியாகக் கூற இயலும்,” என்று முகமது ஃபரிட் கூறினார்.
“எனவே பாதுகாப்பை முன்னிட்டு, அந்த வளாகம் தொடர்பில் முறையான நடவடிக்கை மேற்கொள்வது குறித்துப் பரிசீலிக்கப்படும்,” என்றார் அவர்.
முன்னதாக, அப்பள்ளியை ரோஹிங்யா அகதிகள் தங்கள் பிள்ளைகளின் சமயக் கல்விக்காகப் பயன்படுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
அந்த வளாகம் குறித்து சமய மன்றம், காவல்துறை, மாநில அதிகாரிகள் எனப் பல தரப்புகளும் தொடர்ந்து விசாரணை நடத்திய பிறகு, இறுதித் தீர்வாக பாதுகாப்பை முன்னிட்டு அதை இடிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றார் திரு முகமது ஃபரிட்.
20 ஆண்டுகளுக்குமுன் மதரசா லுக்மானுல் ஹக்கிம் பள்ளி, ஜமா இஸ்லாமியா போராளிகள் குழுவின் தலைவர்கள் சந்திக்கும் இடமாக இருந்துவந்தது. தீவிரவாதச் சித்தாந்தம் அங்கு பேணப்பட்டதை அடுத்து மலேசிய அதிகாரிகள் அதை மூட உத்தரவிட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை உலு திராமில் தாக்குதல் நடத்திய ஆடவரின் வீட்டுக்கு அருகில் அந்த மதரசா பள்ளி அமைந்துள்ளது.
மே 17ஆம் தேதி அதிகாலை, அந்த 21 வயது ஆடவர், உலு திராம் காவல் நிலையத்தைத் தாக்கியதில் காவல்துறை அதிகாரிகள் இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமுற்றார். பின்னர் தாக்குதல்காரர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவ்வேளையில், ஜோகூர் இஸ்லாமிய சமயத் துறை, ரோஹிங்யா அகதிகளுக்குக் கல்வி வழங்கும் இஸ்லாமியக் கல்வி நிலையங்கள் அனைத்தையும் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பது இதன் நோக்கம்.
மலேசிய அரசாங்கத்தின் வழிகாட்டிக் குறிப்புகளுக்கு ஏற்ப அந்த நிலையங்கள் நடந்துகொள்ள இஸ்லாமிய சமயத் துறை உதவும் என்று கூறப்பட்டது.