வியட்னாமின் புதிய அதிபராகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டோ லாம் தேர்வு

வியட்னாமின் புதிய அதிபராகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டோ லாம் தேர்வு

1 mins read
1d7f48f5-1cee-4c87-8038-d3912cd091e8
புதிய அதிபர் டோ லாம். - படம்: ராய்ட்டர்ஸ்

ஹனோய்: வியட்னாம் நாடாளுமன்றம், மே 22ஆம் தேதி, நாட்டின் புதிய அதிபராகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டோ லாமைத் தேர்ந்தெடுத்துள்ளது.

66 வயதாகும் திரு லாமைச் சென்ற வாரம் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, அதிபர் பதவிக்குப் பரிந்துரைத்திருந்தது.

வாக்கெடுப்பு முடிந்த பிறகு பேசிய திரு லாம், நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் உண்மையாக இருக்க உறுதியளித்தார்.

“எனக்குத் தரப்படும் பணிகளை நிறைவேற்ற என்னால் ஆன அனைத்தையும் செய்வேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

2016ஆம் ஆண்டிலிருந்து பொதுப் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றும் திரு லாம், 2021ல் நாட்டின் முக்கிய அரசியல் முடிவுகளை மேற்கொள்ளும் குழுவில் இணைக்கப்பட்டார்.

வியட்னாம் மேற்கொள்ளும் ஊழலுக்கு எதிரான இயக்கத்திற்குத் திரு லாமின் பங்களிப்பு மிக முக்கியமானது.

நாட்டில் பரவலாகக் காணப்படும் ஊழலை வேரோடு அழிப்பதை இலக்காகக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் இந்த இயக்கம், அரசியல் பூசலின்போது எதிர்ப்பாளர்களை ஓரங்கட்டுவதற்கான கருவி என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

வியட்னாமில் அதிபர் பதவி பெரும்பாலும் சடங்குபூர்வமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

அதிபர், ஆளுங்கட்சித் தலைவர், பிரதமர், நாடாளுமன்ற நாயகர் ஆகிய பதவிகள் அங்கு ‘நான்கு தூண்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

கடந்த மார்ச் முதல் வியட்னாமிய அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. முக்கியத் தலைவர்கள் ஐவரில் மூவர் பதவி விலகிவிட்டனர்.

அதிபர், நாடாளுமன்ற நாயகர் ஆகியோரும் அவர்களில் அடங்குவர். அவர்கள் தவறிழைத்ததாகக் கூறப்பட்டாலும் அது எத்தகையது என்று குறிப்பிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்