பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் ஆதரவு; இஸ்‌ரேல் எதிர்ப்பு

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் ஆதரவு; இஸ்‌ரேல் எதிர்ப்பு

2 mins read
62fe715b-0716-470a-b01d-828d3c9c454b
பாலஸ்தீன - இஸ்ரேல் வட்டாரத்தில் அமைதி திரும்ப வேண்டுமெனில் பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதால் மட்டுமே முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் சில கூறியுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

ரஃபா: பாலஸ்தீனிய அரசை அங்கீகரிப்பதாக மூன்று ஐரோப்பிய நாடுகளின் அறிவிப்புக்கு இஸ்ரேல் சீற்றத்துடன் பதிலளித்துள்ளது.

பேரழிவை ஏற்படுத்தி வரும் காஸா போர் ஏழு மாதங்களைக் கடந்துள்ள நிலையில், அயர்லாந்து, நார்வே, ஸ்பெயின் ஆகிய நாடுகள் மே 28ஆம் தேதி பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதாக புதன்கிழமை (மே 22) தெரிவித்தன.

இஸ்ரேல் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது “பயங்கரவாதத்திற்கு வெகுமதி” என்று அது சாடியது.

“அவசர ஆலோசனைகளுக்கு” இஸ்ரேல் மூன்று நாடுகளுக்கும் அதன் தூதர்களை உடனடியாக திரும்ப உத்தரவிட்டது. இது “கடுமையான விளைவுகளை” ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தது.

வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “இந்த நாடுகளின் மாற்றமான நடவடிக்கை அக்டோபர் 7 பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகளுக்கு அநீதி” என்று குற்றம் சாட்டினார்.

அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே தூதர்களைக் கண்டிப்பதாகவும் ஹமாஸால் பிணை பிடிக்கப்பட்ட பெண்ணின் காணொளியைக் காண்பிக்கப்போவதாகவும் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன அரசை நார்வே அங்கீகரிக்கும் என்று புதன்கிழமை (மே 22) கூறிய அந்நாட்டுப் பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர், இவ்வாறு அங்கீகாரம் வழங்குவது அந்த வட்டாரத்தில் அமைதியை ஏற்படுத்த வழிவகுக்கும் என்றார். அதேபோல் அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பிரதமர்களும் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கும் திட்டத்தை ஆதரிப்பதாகத் கூறி உள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பியத்தில் உள்ள சுலோவேனியா, மால்ட்டா ஆகிய நாடுகளும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதால் மட்டுமே அவ்வட்டாரத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று கடந்த சில வாரங்களாகக் கூறி வருகின்றன.

அமெரிக்கா உள்பட பெரும்பாலான மேற்கத்திய அரசாங்கங்கள் பாலஸ்தீனத்தின் அரசாங்கத்தை ஒரு நாள் அங்கீகரிக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றன. ஆனால் அதன் எல்லைகள், ஜெருசலேமின் நிலைபோன்ற பிரச்சினைகளில் உடன்பாடு எட்டப்பட்ட பின்னரே அது சாத்தியம் என அவை கூறி வருகின்றன.

எனினும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்,காஸா பகுதியில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் “வலி, அழிவு” பிரசாரம் இரு நாடுகள் தீர்வுக்கு “ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று குற்றம் சாட்டினார்.

அதேநேரத்தில், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதற்கான நிபந்தனைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் புதன்கிழமை கூறினார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் சில பகுதிகளை ஆளும் பாலஸ்தீன அரசாங்கம், 193 ஐ.நா உறுப்பு நாடுகளில் 142 ஏற்கெனவே பாலஸ்தீனிய அரசை அங்கீகரித்துள்ளதாகக் கூறியது.

மூத்த ஹமாஸ் தலைவர் பேசெம் நைம் மூன்று ஐரோப்பிய அரசாங்கங்களின் முடிவுகளை வரவேற்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்