அயோவா: அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 21) சக்திவாய்ந்த சூறாவளிக் காற்று வீசியது. இதில் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்குள்ள கிரீன்ஃபீல்ட் பகுதியில் ஏராளமான வீடுகள் சேதமடைந்து தெருவெங்கும் குப்பை கூளங்களாகக் காட்சியளிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூறாவளி பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுக்காவல்துறை அதிகாரி அலெக்ஸ் டின்க்லா, இந்தச் சூறாவளிக் காற்று நகரத்தின் அருமையான இடத்தை அலங்கோலப்படுத்தி விட்டது என்று வருந்தினார்.
முக்கியமாக கிரீன்ஃபீல்ட் நகரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு படுகாயமடைந்த பலர் அங்குள்ள சமூக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த மருத்துவமனை மிகச் சிறியது என்பதால் நோயாளிகள் பலர் அருகேயுள்ள நகரங்களின் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஏராளமானோர் உயிரிழந்துவிட்டனர். ஆனால், எத்தனை பேர் பலியானார்கள் என்பது குறித்து அதிகாரிகள் விரைவில் அறிவிப்பார்கள் என்று கூறிவிட்டார் அதிகாரி அலெக்ஸ்.

