மனிதருக்குப் பரவிய பறவைக் காய்ச்சல்: ஆஸ்திரேலியாவில் முதல் சம்பவம்

1 mins read
40253e99-4253-4dca-bbd6-275ea9fdc33d
ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் பறவைக் காய்ச்சல் பரவவில்லை என்று அதிகாரிகள் கூறினர். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: மனிதர் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் தொற்றிய முதல் சம்பவம் ஆஸ்திரேலியாவில் பதிவாகி உள்ளது.

ஒரு குழந்தையிடம் அந்தத் தொற்று காணப்பட்டதாகவும் அக்குழந்தை இந்தியாவில் இருந்தபோது பறவைக் காய்ச்சல் தொற்றி இருக்கலாம் என்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறினர். தற்போது அந்தக் குழந்தை முழுமையாகக் குணமடைந்துவிட்டது.

தென்கிழக்கு ஆஸ்திரேலிய மாநிலமான விக்டோரியாவின் தலைநகர் மெல்பர்ன் அருகே முட்டைப் பண்ணை ஒன்றில் மாறுபட்ட, விரைந்து தொற்றக்கூடிய கிருமி கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மனிதரிடம் இருந்து மனிதருக்கு பறவைக் காய்ச்சல் பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று விக்டோரியா மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட குழந்தையிடம் இருந்து வேறு எவருக்கும் அந்தக் காய்ச்சல் தொற்றியதற்கான அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

விக்டோரியாவில் கண்டறியப்பட்டது எச்5என்1 கிருமிதான் என்றபோதிலும் அமெரிக்காவில் பரவிய கிருமிக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று சுகாதாரத் துறை தலைமை அதிகாரி டாக்டர் கிளைர் லூக்கர் கூறினார்.

எச்5என்1 என்னும் பறவைக் காய்ச்சல் கிருமி அண்மைய ஆண்டுகளில் உலகின் பலரைத் தொற்றியது. அதனைத் தொடர்ந்து பில்லியன்கணக்கான பறவைகள் கொன்று ஒழிக்கப்பட்டன.

அண்மையில் சில நாள்களுக்கு முன்னர் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அங்கிருந்த 920 பறவைகள் அழிக்கப்பட்டன.

அவற்றில் 770 வாத்துகளும் அடங்கும். இவை தவிர 4,300 முட்டைகளையும் அதிகாரிகள் அழித்தனர்.

குறிப்புச் சொற்கள்