டீசல் விலைச் சலுகையை ரத்து செய்கிறது மலேசிய அரசாங்கம்

2 mins read
1f3cabff-1f90-4f8b-b8f6-9c49729ffc8e
டீசல் மானியம் எப்போது நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்படவில்லை. - கோப்புப் படம்: சாவ்பாவ்

எரிபொருளுக்கான மானியத்தை மலேசிய அரசாங்கம் நிறுத்த முடிவு செய்துள்ளது. அந்த நடவடிக்கை டீசலில் இருந்து தொடங்கப்படுகிறது.

டீசல் மானியத்தை நிறுத்துவதன் மூலம் அரசாங்கத்துக்கு ஆண்டுக்கு 4 பில்லியன் ரிங்கிட் (S$1.15 பில்லியன்) தொகை மிச்சமாகும்.

இதனை பிரதமர் அன்வார் இப்ராகிம் செவ்வாய்க்கிழமை (மே 21) தெரிவித்தார்.

விலைச்சலுகை என்பது குறைந்த வருமானக் குடும்பத்திற்கு உரியது என்றும் அவற்றை வசதிபடைத்தவர்கள் அனுபவிப்பது தடுத்து நிறுத்தப்படும் என்றும் திரு அன்வார் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.

வசதியானவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த டீசல் மானியம் ரத்து செய்யப்படுவதன் மூலம் மிச்சமாகும் தொகை தேவையுள்ள மக்களுக்குத் திருப்பிவிடப்படும் என்றும் குறிப்பாக, டீசல் வாகனங்களை வைத்திருக்கும் எளிய மக்களுக்கு ரொக்கமாக மானியம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

அந்தப் பட்டியலில் சிறு வர்த்தகர்களும் விவசாயிகளும் உள்ளனர்.

மலேசிய அரசாங்கம் எரிபொருள், சமையல் எண்ணெய், அரிசி போன்ற பொருள்களுக்கு மானியம் வழங்குகிறது.

ஆயினும் அத்தகைய அத்தியாவசியப் பொருள்களின் விலை அண்மைய ஆண்டுகளாகத் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால் சலுகை வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு ஆகும் செலவு அதிகரிக்கிறது.

“சலுகையை நீக்குவது என்பது பெரும்பாலான மக்களுக்குச் சுமையாக இருந்துவிடக் கூடாது என்று நான் கருதுகிறேன். மேலும், டீசல் உதவிமானிய சீர்திருத்தம் மலேசிய மக்களுக்கானது,” என்று திரு அன்வார் தமது தொலைக்காட்சி உரையில் குறிப்பிட்டார்.

இருப்பினும், டீசல் மானியம் எப்போது முதல் நிறுத்தப்படும் என்று அவர் குறிப்பிடவில்லை.

அதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று மட்டும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியா இவ்வாண்டு மானியங்களுக்கும் சமூக உதவித் திட்டங்களுக்கும் 52.8 பில்லியன் ரிங்கிட்டைச் செலவிடப் போவதாக அறிவித்து இருந்தது.

இச்சலுகை 2023ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 64.2 பில்லியன் ரிங்கிட்டைக் காட்டிலும் குறைவு.

குறிப்புச் சொற்கள்