பெட்டாலிங் ஜெயா: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் முனைவர் பட்டக் கல்வி மாணவராக இருக்கும் அர்ஜுன் கணநாதனுக்கு 2024ஆம் ஆண்டுக்கான ரால்ஃப் டி கான்ட்ஸ் நீதித்துறை விருது வழங்கப்பட்டுள்ளது.
வசதி குறைந்தோருக்கும் சட்ட சேவை கிடைக்க மலேசியரான திரு அர்ஜுன் உதவியதால் அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
சமூக நீதிக்காகப் போராடிய, மறைந்த அமெரிக்க நீதிபதி ரால்ஃப் டி கான்ட்ஸைக் கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
அவர் பெயரில் முதன்முதலாக 2021ஆம் ஆண்டில் விருது வழங்கப்பட்டது.
இந்த விருது கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக 24 வயது திரு அர்ஜுன் தெரிவித்தார்.
“வசதி குறைந்தோரைப் பிரதிநிதிப்பதே வழக்கறிஞர்களுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய கௌரவம் என்பதை நீதிபதி கான்ட்ஸின் செயல்பாடுகள் நினைவூட்டுகின்றன,” என்றார் திரு அர்ஜுன்.
தமது முதல் வழக்கு விசாரணையைத் திரு அர்ஜுன் நினைவுகூர்ந்தார்.
ஒற்றைப் பெற்றோராக இருக்கும் பெண் ஒருவரைத் தாம் பிரதிநிதித்ததாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அந்தப் பெண்ணின் சிறப்புத் தேவைகள் உள்ள மகனை அவரிடமிருந்து 90 நாள்களுக்குப் பிரிக்க அரசாங்க வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டதாக திரு அர்ஜுன் கூறினார்.
ஆனால் தமது கட்சிக்காரருக்காக வாதாடியதாகவும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் திரு அர்ஜுன் தெரிவித்தார்.
இன்னொரு வழக்கில் வயது குறைந்த மாணவர் ஒருவரைப் பிரதிநிதித்ததாக அவர் கூறினார்.
“அடுத்த 48 மணி நேரத்தில் ஆண்டிறுதித் தேர்வு எழுத வேண்டும் எனத் தெரிவித்து, அந்த மாணவர் பிணை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். அவருக்குப் பிணை வழங்கக்கூடாது என்று அரசாங்க வழக்கறிஞர்கள் வாதாடினர். ஆனால் அரசாங்க வழக்கறிஞர்களின் வாதத்தை முறியடித்து அந்த மாணவர் பிணையில் வெளியே வந்து தேர்வு எழுத உதவினேன்,” என்று திரு அர்ஜுன் கூறினார்.
வசதி குறைந்த கட்சிக்காரர்களின் உணர்வுகளை நன்கு புரிந்து அவர்கள் மீது அக்கறை காட்டியதற்காக திரு அர்ஜுனுக்கு விருது வழங்கப்பட்டதாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை கூறியது.