தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹமாஸ் தலைவர்கள் சந்திப்பை தற்காத்துப் பேசிய அன்வார் இப்ராகிம்

2 mins read
edcadd24-8e84-486a-84b9-99c72d7ab271
மே 13ஆம் தேதி ஹமாஸ் இயக்கத் தலைவர், அவரது குழுவினரை சந்தித்த மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் விமர்சனத்துக்கு உள்ளானார். - படம்: ஏஎஃப்பி

ஹமாஸ் இயக்கத் தலைவரையும் அவரது குழுவினரையும் தான் மே 13ஆம் தேதி சந்தித்துப் பேசியதை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வியாழக்கிழமை (மே 23) அன்று தற்காத்துப் பேசியுள்ளார்.

ஹமாஸ் தலைவரைத் தமக்கு பல்லாண்டு காலமாகத் தெரியும் என்றும் அதனால் தன்னால் மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டுவர முடியும் என்று தான் நம்பியதாகக் கூறினார்.

மே 13ஆம் தேதி மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கத்தாரில் ஹமாஸ் குழுவுக்குத் தலைமை தாங்கிய அதன் தலைவர் இஸ்மாயில் ஹனியாவைச் சந்தித்தார். அவரது இந்தச் சந்திப்புக்கு விமர்சனங்கள் எழுந்ததால் அதற்குப் பதிலளிக்கும் விதமாக தோக்கியோவில் நடைபெற்ற நிக்கே மாநாட்டில் திரு அன்வார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்தச் சந்திப்பில் அண்டை நாடுகளின் முடிவுகளை மதித்து நடக்கும்படி தான் கூறியதாக அவர் விளக்கினார். அத்துடன், இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவித்து பதிலுக்கு பாலஸ்தீனச் சிறைக் கைதிகளின் விடுவிப்பை நாடும்படியும் இரு நாடுகள் தீர்வை ஏற்கும்படியாகக் கூறியதாகவும் தெரிவித்தார்.

“அது ஒரு குற்றமா? நான் என்ன பயங்கரவாதத்தை ஊக்குவித்தேனா?,” என்று திரு அன்வார் முழங்கினார்.

“ஹமாஸ் தலைவர்களுடன் நான் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஒரு நன்மை உள்ளது. அது என்ன என்று கேட்கிறீர்களா? எனக்கு அவர்களைத் தெரியும், அவர்களும் என்னை நண்பனாகக் கருதுகின்றனர்,” என்று அவர் விளக்கினார்.

ஹமாஸ் தலைவர் ஹனியாவை மே 13ஆம் தேதி சந்தித்தது அவர் பிரதமரான பின் மேற்கொண்ட முதல் சந்திப்பாகும். ஆனால், முன்னர் 2019, 2020 ஆம் ஆண்டுகளில் ஹமாஸ் தலைவரை தான் சந்தித்துள்ளதாக திரு அன்வார் கூறினார்.

காஸாவில் நடப்பதை முன் எப்போதும் இல்லாத மானிடப் பேரிடராகக் கருத வேண்டும் என்று திரு அன்வார் தெளிவுபடுத்தினார்.

“மக்கள் இதை ஒரு அரசியல் நெருக்கடி என்ற கோணத்தில் பார்க்கலாம். ஆனால், இதில் உண்மை என்னவென்றால், தினம் தினம் பிள்ளைகள், மாதர், சாதாரண மக்கள் கொல்லப்படுவதுடன் மருத்துவமனைகள், பள்ளிகள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் ஆகியவை அழிவைச் சந்திப்பது அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்