மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் நியுவோ லியோன் மாநிலத்தில் மே 22ஆம் தேதி சூரைக்காற்று வீசியதால் குடிமக்கள் முன்னேற்றக் கட்சியின் பிரசார மேடை சரிந்து 9 பேர் மரணமடைந்ததுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.
இதை அந்த மாநில ஆளுநர் தெரிவித்தார்.
இதில் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்ததாக நியூவோ லியோன் மாநில ஆளுநர் சேமுவல் கர்சியா சமூக ஊடகத்தில் பதிவு செய்தார். இந்நிலையில், மெக்சிகோவின் சமூக பாதுகாப்பு நிலைய இயக்குநர் மேலும் பலர் உள்ளூர் மருந்தகங்களில் சிகிச்சை பெறுவதாகக் கூறினார்.
இறந்தவர்களில் எண்மர் பெரியவர்கள் என்றும் ஒன்பதாவது நபர் ஒரு குழந்தை என்றும் திரு கர்சியா விளக்கினார். மேலும் மூவர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களைத் தான் காண மருத்துவமனை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும் ஆளுநர் கர்சியா தெரிவித்தார்.
இதுபற்றிக் கருத்துரைத்த குடிமக்கள் முன்னேற்ற இயக்கத்தின் அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோர்கே அல்வரேஸ் மெய்னேஸ், பலத்த காற்று அடித்ததில் சான் பெட்ரோ கார்சா கர்சியா நகரில் நடந்த பிரசார மேடை சரிந்ததாகக் கூறினார்.
பிரசார மேடை சரிந்ததைக் காட்டும் காணொளியில் அந்த மேடை, கூட்டத்தினர் இருந்த பகுதியில் முன்னோக்கி சரிவது தெரிந்தது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த அரசியல்வாதிகள் பாதுகாப்பான இடம் தேடி ஓட, கூடியிருந்த மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓட்டம் பிடிப்பதைக் காணொளி காட்டியது.
“இதுபோல் திடீரென ஏற்படும் ஒன்றை நான் கண்டதில்லை,” என்று சூரைக்காற்று கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எப்படி வீசியது என்பதை திரு அல்வரேஸ் மெய்னேஸ் செய்தியாளர்களிடம் விவரித்தார்.
பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்த திரு அல்வரேஸ் மெய்னேஸ் தான் பிரசார கூட்டங்கள் அனைத்தையும் தற்காலிகமாக ரத்து செய்திருப்பதாகக் கூறினார்.

