கோலாலம்பூர்: ஜோகூர் உலு திராம் காவல் நிலையத்தில் இரண்டு காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடைமுறை) சட்டத்தின்கீழ் (சோஸ்மா) ஐவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அரச மலேசிய காவற்படையின் தலைவர் ரஸாருதின் ஹுசேன் தெரிவித்தார்.
மே 24ஆம் தேதியுடன் தடுப்புக் காவல் முடிவடைவதால் ஐவரும் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டனர் என்று மலேசியகினி ஊடகம் வெளியிட்ட தகவல் குறிப்பிட்டது.
“சோஸ்மா சட்டத்தின்கீழ் ஐவரைக் கொண்ட குடும்பத்தை நாங்கள் தடுத்து வைத்துள்ளோம்,” என்று மே 24ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய திரு ரஸாருதின் ஹுசேன் குறிப்பிட்டார்.
இதுவரை 47 சாட்சியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
காவலர்கள் அஹமட் அஸ்ஸா ஃபாமி அஸார், முகம்மது சியாஃபிக் அகம்மது சயித் ஆகியோரை சுட்டுக் கொன்றதாக நம்பப்படும் முக்கிய சந்தேக நபர் ஜமா இஸ்லாமியாவைச் சேர்ந்தவர் அல்லர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“தரவுகளை அலசி ஆராய்ந்த பிறகு அவருக்கு ஜமா இஸ்லாமியாவுடன் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அவரது தந்தைக்கு அந்த அமைப்புடன் தொடர்பு இருக்கிறது,” என்றார் அவர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவும் சிறப்பு கிளையும் விசாரணை நடத்தி வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
மே 17ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு காவலர்கள் கொல்லப்பட்டனர். 19 வயது முதல் 61 வயது வரையிலான ஐவர் கொண்ட குடும்பத்தினர் இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.