தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நெட்டன்யாகு உரையாற்றுவார்: மன்ற நாயகர் அறிவிப்பு

2 mins read
5bf807a7-98b0-4a90-a8d2-9b48802a03fe
அமெரிக்க நாடாளுமன்ற நாயகரும் குடியரசுக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவருமான மைக் ஜான்சன். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இணைந்த கூட்டுக் கூட்டத்தில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உரையாற்றுவார் என்று மன்ற நாயகர் மைக் ஜான்சன் புதன்கிழமை (மே 23) அறிவித்தார்.

காஸாவுடனான போரை நடத்தும் விதம் குறித்து இஸ்ரேலின் தலைமைத்துவத்துக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த திரு ஜான்சன், அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலியத் தூதரகத்தின் வருடாந்திர சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

திரு நெட்டன்யாகு பங்கேற்கும் நிகழ்வு, உரிய நேரத்தில் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அமெரிக்கா அளிக்கும் வலுவான ஆதரவாக அமையும் என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடந்துகொள்ளும் விதத்தைக் கடுமையாக விமர்சித்து வரும் ஜனநாயகக் கட்சியினர் சிலரை நெட்டன்யாகுவின் நிகழ்வு பற்றிய அறிவிப்பு சினமடையச் செய்யும் என்று கூறப்படுகிறது.

காஸாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான போரில் பொதுமக்களைப் பாதுகாக்குமாறு இஸ்ரேலை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக திரு நெட்டன்யாகுவுக்கும் திரு பைடனுக்கும் இடையிலான உறவில் கசப்பு தென்படுகிறது.

இப்படிப்பட்ட ஒரு நிலையில் திரு நெட்டன்யாகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று திரு ஜான்சன் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஆதரவாளர்கள் மிகுந்திருந்த சுதந்திர தின விழாவில் பேசிய அவர், “இன்றிரவு மகிழ்ச்சியான ஓர் அறிவிப்பை வெளியிடுகிறேன். நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நெட்டன்யாகு விரைவில் உரையாற்றுவார் என்பதே அந்த அறிவிப்பு,” என்றார்.

வாஷிங்டனின் மத்திய கிழக்கு நட்பு நாடு என்ற இஸ்ரேலின் அந்தஸ்தைப் பிரதிபலிக்கும் விதமாக அந்நாட்டு சுதந்திர தின விழாவுக்கு உயர்மட்ட அதிகாரியை அமெரிக்க நிர்வாகம் அனுப்பி வைப்பது வழக்கமான ஒன்று.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்