போர்ட் மோர்ஸ்பி (பாப்புவா நியூ கினி): பாப்புவா நியூ கினியின் வடக்குப் பகுதி கிராமத்தில் மே 24ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் மாண்டதாக அஞ்சப்படுகிறது.
தலைநகர் போர்ட் மோர்ஸ்பியிலிருந்து ஏறக்குறைய 600 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ளது காவ்கலம் கிராமம்.
அங்கு பலரும் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் 50க்கு மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் புதையுண்டதாக நிங்கா ரோல் எனும் குடியிருப்பாளர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 300 பேர் மாண்டதாகவும் அவர்களில் தனது சகோதரரும் நெருங்கிய உறவினரும் அடங்குவர் என்றும் அவர் கூறியதாகத் தெரிகிறது.
இருப்பினும், ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகமும் இதர உள்ளூர் ஊடகங்களும் 100க்கு மேற்பட்டோர் மாண்டதாகத் தகவல் வெளியிட்டுள்ளன.
தனது இரண்டு குழந்தைகளைக் காப்பாற்ற நிலச்சரிவுப் பகுதிக்கு மீண்டும் சென்ற ஆடவரும் அவரது உறவினர்களும் புதையுண்டதாகக் குடியிருப்பாளர் ரோல் கூறினார்.
சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில் மீட்புப் பணியாளர்கள் பாறைகளையும் வேரோடு சாய்ந்த மரங்களையும் பற்றிய வண்ணம் தேடல் பணியில் ஈடுபட்டுள்ளதைக் காண முடிகிறது. பின்னணியில் பெண்களின் அழுகுரலும் கேட்கிறது.
பாறைகளும் மரங்களும் அதிகம் நிரம்பிய பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்புப் பணியாளர்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தமக்கு இன்னும் முழு விவரம் தெரிவிக்கப்படவில்லை என்று கூறிய பிரதமர் ஜேம்ஸ் மராப்பே, அதிகாரிகள் இந்தப் பேரிடர் தொடர்பான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
பேரிடர் நிர்வாகப் பிரிவு, தற்காப்புப் படை, நெடுஞ்சாலைப் பணித்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
போர்கெரா தங்கச் சுரங்கத்திற்கு அருகே உள்ள நெடுஞ்சாலையின் ஒரு பகுதி நிலச்சரிவால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. சுரங்கம் சேதமடைந்ததா என்பது குறித்துத் தகவல் இல்லை.

