பெண் ஊழியர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் தென்கொரியா

பெண் ஊழியர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் தென்கொரியா

1 mins read
c9e06933-5901-4633-a4f5-821556b2c170
தென்கொரியாவின் பாலின ஊதிய வேறுபாடு, நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் இருமடங்கு அதிகம். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

சோல்: பொருளியல் ஒத்துழைப்பு மேம்பாட்டு அமைப்பில் (ஓஇசிடி) இடம்பெற்று இருக்கும் நாடுகளிலேயே தென்கொரியாதான் ஆக மோசமான பாலின ஊதிய முறையைக் கொண்டிருப்பது தெரிய வந்து உள்ளது.

ஓஇசிடி அமைப்பில் 38 நாடுகள் இடம்பெற்று உள்ளன. ஆண் ஊழியர்களுக்கும் பெண் ஊழியர்களும் இடையிலான ஊதிய வேறுபாடு அந்த நாடுகளில் கணக்கெடுக்கப்பட்டது. அந்த வகையில், பெண் ஊழியர்களை தென்கொரியா தொடர்ந்து வஞ்சித்து வருவது கடந்த 2022ஆம் ஆண்டின் தரவுகளில் புலப்பட்டது. அந்த ஆண்டில் ஆண்களைக் காட்டிலும் பெண் ஊழியர்களுக்குச் சராசரியாக 31.2% குறைவான ஊதியத்தை வழங்கியதாக தரவுகள் தெரிவித்தன. இதனை ஓஇசிடி வியாழக்கிழமை (மே 23) தெரிவித்தது. இருபாலினங்களுக்கு இடையிலான சராசரி ஊதிய இடைவெளி விகிதம் 12.1% என்று அந்த அமைப்பு நிர்ணயித்து உள்ளது. ஆனால், தென்கொரிய நிலவரம் அதைக்காட்டிலும் இருமடங்காக உள்ளது.

அமைப்பில் இடம்பெற்று உள்ள எந்த ஒரு நாட்டிலும் இரட்டிப்பாகும் அளவுக்கு பாலின ஊதிய ஏற்றத்தாழ்வு இல்லை. பாலின ஊதிய விகிதம் ஜப்பானில் 21.3 விழுக்காடாகவும் அமெரிக்காவில் 17 விழுக்காடாகவும் உள்ளது.

ஆசியாவின் நான்காவது பெரிய பொருளியல் நாடான தென்கொரியா, தொடர்ந்து 27 ஆண்டுகளாக பாலின ஊதிய விகிதத்தில் இதர உறுப்பு நாடுகளைக் காட்டிலும் ஆக மோசமானதாக நீடித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்