சோல்: அமெரிக்காவும் தென்கொரியாவும் தமது நாட்டுக்கு எதிராக உளவு வேலையை தீவிரப்படுத்தியிருக்கின்றன என்று வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
தனது நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் எந்தச் செயலுக்கும் தக்க பதிலடித் தரப்படும் என்று அது எச்சரித்துள்ளது.
அமெரிக்காவும் தென்கொரியாவும் கொரிய தீபகற்பத்தில் உளவு பார்க்கும் விமானங்களையும் கப்பல்களையும் அனுப்பி வருகின்றன.
மே 13 முதல் 24 வரை வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் உளவு பார்ப்பதற்காகவே 12க்கும் மேற்பட்ட விமானங்களை அனுப்பியிருக்கிறது என்று வடகொரிய துணை தற்காப்பு அமைச்சர் கிம் காங் இல் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
ஏறக்குறைய 12 நாள் காணப்பட்ட உளவு நடவடிக்கைகள் ‘போர்க்கால சூழலுக்கு அப்பாற்பட்ட அளவில்’ இருந்ததாகவும் அதிகாரபூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறினார்.
“பல்வேறு கூட்டு ராணுவப் பயிற்சிகளுடன் விரோதப் போக்குடன் மேற்கொள்ளப்படும் ராணுவ உளவு வேலைகள் தொடர்ந்து அதிகரிப்பது வட்டாரப் பதற்றத்துக்கு மூலகாரணமாக மாறியுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்குப் பதிலடியாக வடகொரியா தேவையான ராணுவ நடவடிக்கைகளை எடுக்கும் என்ற துணை அமைச்சர், எங்களுடைய கடல் எல்லைக்குள் ஊடுருவினால் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.

