ஜோகூர் பாரு: தீவிரவாதம், பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளிலிருந்து மாறுபட்ட போதனைகள் ஆகியவற்றுக்கு எதிராக ஜோகூர் காவல்துறை விழிப்புடன் இருக்கும் என்று மலேசியாவின் ஜோகூர் மாநிலக் காவல்துறை ஆணையர் எம். குமார் உறுதி அளித்துள்ளார்.
சமயத் தீவிரவாதம், தீவிரவாதக் கொள்கைகள் கொண்ட கும்பல்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தீவிரவாதக் கும்பல்கள் எனச் சந்தேகிக்கப்படும் அமைப்புகள் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவதாக திரு குமார் தெரிவித்தார்.
தீவிரவாதக் கொள்கைகள் கொண்டவர்களைப் பற்றி தகவல் அறிந்தால் அதுகுறித்து உடனடியாகக் காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்று ஜோகூர் மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
மே 17ஆம் தேதியன்று ஜாமியா இஸ்லாமியா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உலு திராம் நகரில் உள்ள காவல்துறை நிலையத்தில் தாக்குதல் நடத்தினார். அதில் காவல்துறை அதிகாரிகள் இருவர் மாண்டனர்.
தாக்குதல் நடத்தியவர் காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதல் தொடர்பாகப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

