கோல்கத்தா: ரெமல் புயல் தாக்கத்தின் எதிரொலியாக மேற்கு வங்கத்தில் இருவர் உயிரிழந்தனர். அத்துடன், இந்தப் புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
வங்கக்கடலில் நிலவிய ரெமல் தீவிர புயல், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளுக்கும் வங்கதேசத்தின் கெப்புபாரா பகுதிக்கும் இடையே கரையைக் கடந்தது. இதனால், மேற்கு வங்கத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. புயல் மழையால் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. கூடவே சிறிய கூரை, தகர வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன.
மத்திய கோல்கத்தாவின் பிபிர் பாகன் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து ஒருவரும் சுந்தரவனத்தின் மவுசூனி தீவுப் பகுதியில் உள்ள நம்கானாவில் மரம் முறிந்து வீட்டின்மீது விழுந்ததால் மூதாட்டி ஒருவரும் உயிரிழந்தனர்.
கோல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் திங்கட்கிழமை காலை மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தன. செல்டா ரயில் நிலையத்தில் காலை 3 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக சீரமைப்புப் பணிகள் நிறைவுபெற்று போக்குவரத்து தொடங்கியது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 20 மணி நேரம் முடங்கியிருந்த விமானப் போக்குவரத்து பின்னர் திங்கட்கிழமை காலை சீரானது.
இதற்கிடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புயல் பாதிப்பை ஆய்வு செய்தார். புயல் வலுவிழந்தாலும் அதன் தாக்கத்தால் அசாம் மாநிலத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

