தோக்கியோ: ஜப்பானின் ஃபுஜிகாவாகுஜிக்கோ நகரில் உள்ள லாசன் கடைக்கு அருகில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் பலர் கூடி நின்று, புகழ்பெற்ற ஃபுஜி மலையைத் தூரத்திலிருந்து படம்பிடிக்கும்போது விதிமுறைகளை மீறி தொல்லை விளைவிப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தோர் புகார் அளித்தனர்.
இதையடுத்து, அங்கிருந்து ஃபுஜி மலையைப் படமெடுக்க முடியாதபடி 2.5 மீட்டர் உயரத்திலும், 20 மீட்டர் அகலத்திலும் தடுப்பு போடப்பட்டது.
தடுப்பு போடுவதால் சுற்றுப்பயணிகளின் வருகை குறையும் என்ற அச்சம் இருந்தாலும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுப்பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதாக மே 24ல் மேயர் ஹிடியுக்கி வட்டனாபே தெரிவித்தார்.
இந்நிலையில், ஃபுஜிகாவாகுஜிக்கோவில் உள்ள இன்னொரு லாசன் கடைக்கு அருகில் நின்று ஃபுஜி மலையைப் படமெடுக்கலாம் என்று சுற்றுப்பயணிகள் சிலர் கண்டுபிடித்து அவ்வாறு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
தடுப்பு போடப்பட்ட இடத்திலிருந்து இந்த இடம் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ஆனால் இன்னொரு தடுப்பு போடத் திட்டம் ஏதுமில்லை என்று திரு வட்டனாபே கூறினார்.
சுற்றுப்பயணிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்துகொண்டால் ஏற்கெனவே போடப்பட்டுள்ள தடுப்பு அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்