தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலவழி சோதனைச்சாவடி வழியாக சிங்கப்பூர் வரும் மலேசியர்கள் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தலாம்

2 mins read
24306e31-e0af-4959-b8b4-f8198b4bbee8
சோதனைச்சாவடி நடைமுறைகளைப் பற்றி மலேசியத் துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃபிடம் விவரித்த மலேசியக் குடிநுழைவு அதிகாரிகள். - படம்: மலேசிய உள்துறை அமைச்சு
multi-img1 of 2

ஜோகூர் பாரு: ஜூன் 1ஆம் தேதியிலிருந்து உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்கு வரும் மலேசியர்கள் கடப்பிதழுக்குப் பதிலாக கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தலாம்.

கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு அணுகுமுறைக்கான முன்னோட்டத் திட்டம் ஜோகூரில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டடம், சுல்தான் அபு பக்கர் வளாகம் ஆகிய குடிநுழைவுச் சோதனைகளில் தொடங்கும் என்று மலேசியத் துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.

முன்னோட்டத் திட்டத்தின் முதல் கட்டம், சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்திலிருந்து சிங்கப்பூருக்குப் பேருந்து மூலம் பயணம் செய்யும் மலேசியர்கள், சுல்தான் அபு பக்கர் வளாகத்தில் உள்ள தானியங்கி குடிநுழைவு முறையைப் பயன்படுத்தும் மலேசிய மோட்டார் சைக்கிளோட்டிகள் ஆகியோருக்கானது என்று திரு ஃபடில்லா கூறினார்.

இந்த முன்னோட்டத் திட்டம் மூன்று மாதங்களுக்கு நடத்தப்படும் என்றும் அதில் மலேசியர்கள் மட்டுமே பங்கேற்பர் என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்த கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை, சோதனைச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தை ஏறத்தாழ 50 விழுக்காடு குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று திரு ஃபடில்லா கூறினார்.

சோதனைச்சாவடிகளில் பயணிகள் நெரிசலைக் குறைக்க வழிவகைகளைக் காண அமைக்கப்பட்ட சிறப்புக் குழு மே 27ஆம் தேதியன்று கூடியது.

கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய திரு ஃபடில்லா, முன்னோட்டத் திட்டம் குறித்து அறிவித்தார்.

கூட்டத்தில் மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுஷன் இஸ்மாயிலும் ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸியும் கலந்துகொண்டனர்.

இதற்கு முன்னதாக, மே 27ஆம் தேதி அதிகாலை 4.15 மணி அளவில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி துணைப் பிரதமர் ஃபடில்லா, சுல்தான் இஸ்கந்தர் கட்டடச் சோதனைச்சாவடிக்குச் சென்றிருந்தார்.

சோதனைச்சாவடி நடைமுறைகளை நேரில் காண அவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.

பயணிகளைச் சந்தித்துப் பேசியதாகவும் பேருந்துப் பயணப் பாதையைப் பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தமது கைப்பேசியைப் பயன்படுத்தி திரு ஃபடில்லா சோதனைச்சாவடி தொடர்பான படங்களை எடுத்தார்.

சேகரிக்கப்படும் தகவல்கள் சிறப்புக் குழுவுடன் பகிர்ந்துகொள்ளப்படும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்