சிட்னி: பாப்புவா நியூ கினியில் மே 24ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 2,000க்கும் மேற்பட்டோர் புதையுண்டிருக்கக்கூடும் என்று அந்நாட்டு அரசாங்கம், மே 27ஆம் தேதி கூறியுள்ளது.
மோசமான வானிலை, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்குச் செல்வதில் உதவியாளர்கள் சந்தித்த சிரமம் போன்றவற்றால், புதையுண்டவர்களில் மிகக் குறைவானோரை மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்று கருதப்படுகிறது.
பாப்புவா நியூ கினியின் தேசியப் பேரிடர் நிலையம், மே 26ஆம் தேதி, ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில் ஈராயிரம் பேர் புதையுண்டதாக சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. அந்தக் கடிதம் மே 27ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இருப்பினும் 670க்கு மேற்பட்டோர் மாண்டிருக்கக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மற்றோர் அமைப்பு கூறியுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட இடம் மிகவும் உள்ளடங்கி இருப்பதாலும் அதன் மக்கள்தொகை விவரம் துல்லியமாகத் தெரியாததாலும் மாண்டோர் எண்ணிக்கை இவ்வாறு மாறுபடுவதாகக் கருதப்படுகிறது.
பாப்புவா நியூ கினியில் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறவில்லை. அந்நாட்டு மக்களில் பலர் மலைக்கிராமங்களில் வசிக்கின்றனர்.
நாட்டின் வடபகுதியில் உள்ள யம்பாலி கிராமத்தில் மே 24ஆம் தேதி உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் (சிங்கப்பூரில் அதிகாலை 1 மணி) நிலச்சரிவு ஏற்பட்டது.
மக்கள் பலரும் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் 150க்கு மேற்பட்ட வீடுகள் புதையுண்டன. கிட்டத்தட்ட இரண்டு மாடி உயரத்திற்குக் குவிந்திருந்த இடிபாடுகளின்கீழ் அவை சிக்கிக்கொண்டன.
தொடர்புடைய செய்திகள்
அவற்றிலிருந்து பலரின் கூக்குரலைக் கேட்டதாக மீட்புப் பணியாளர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
அதிர்ஷ்டவசமாகத் தப்பிப் பிழைத்தவர்கள், புதையுண்ட குடும்பத்தினரைக் காப்பாற்றும் வழி தெரியாமல் கண்ணீர் வடித்தனர்.
நிலச்சரிவு ஏற்பட்டு 72 மணி நேரத்துக்குப் பிறகும் மண்வெட்டிகள், குச்சிகள் எனக் கைக்குக் கிடைத்தவற்றைக் கொண்டும் வெறுங்கைகளாலும் இடிபாடுகளைத் தோண்டி உயிருடன் இருப்போரைத் தேடி மீட்கும் பணியில் குடியிருப்பாளர்கள் முனைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படும் நிலையில், 1,250க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

