தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அகதிகள் முகாம் மீது இஸ்‌ரேல் தாக்குதல்; ராஃபாவில் மரண ஓலம், உலக நாடுகள் கண்டனம்

1 mins read
ff163998-1957-4775-9a7d-6c29bd410d17
தங்கள் அன்புக்குரியவர்களின் சடலங்களைப் பார்த்து கதறி அழுத பாலஸ்தீன அகதிகள். - படம்: ஏஎஃப்பி

கெய்ரோ: ராஃபா நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்‌ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அங்கு பெரும் வெடிப்பு ஏற்பட்டது. இதில் குறைந்தது 45 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல் காஸா நேரப்படி மே 26ஆம் தேதி இரவு நிகழ்ந்தது.

தாக்குதலின் விளைவாக அங்கு அகதிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த பல கூடாரங்கள் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தன.

சடலங்களுக்குப் பக்கத்தில் பாலஸ்தீனப் பெண்களும் ஆண்களும் கதறி அழும் காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டன.

மாண்டோரில் பலர் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் எனப் பாலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியது.

மிக மோசமான தீக்காயங்கள் காரணமாகப் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே, மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தூங்குவதற்காக குடும்பங்கள் கூடாரங்களுக்குள் சென்றுகொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக உயிர்பிழைத்தோர் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர்.

திடீரென்று ஏற்பட்ட வெடிப்பு, முகாமில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகவும் அகதிகள் முகாமில் இருந்த சிறுவர்களின் அலறல் சத்தம் மனதைப் பதற வைத்ததாகவும் அவர்கள் கூறினர்..

இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமையன்று (மே 28) இஸ்ரேலிய டாங்கிகள் ராஃபாவின் மத்தியப் பகுதியைச் சென்றடைந்ததாகச் செய்தி வெளியானது.

குறிப்புச் சொற்கள்