மோசமான வானிலை: ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் மின்சாரமின்றி தவிப்பு

மோசமான வானிலை: ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் மின்சாரமின்றி தவிப்பு

1 mins read
4b4baaa3-cf41-46ca-bff0-fffdfc2b0c27
சுழல்காற்று காரணமாகப் பல வீடுகள் தரைமட்டமாகின. - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த பல நாள்களாக சுழல்காற்று, புயல் தாண்டவம் ஆடியதை அடுத்து, ஏழு மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மே 27ஆம் தேதி நிலவரப்படி, அங்கு கிட்டத்தட்ட 300,000 பேர் மின்சாரம் இன்றித் தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரயிறுதியில் புயல் காரணமாக குறைந்தது 23 பேர் மாண்டனர்.

பொருட்சேதமும் அதிகமாக இருந்தது என்று அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில், அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் வானிலை மோசமடையக்கூடும் என்று அந்நாட்டு வானிலை மையம் முன்னுரைத்துள்ளது.

நியூயார்க் போன்ற நகரங்களில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று, ஆலங்கட்டி மழை, வெள்ளம் போன்றவை ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூயார்க், பென்சில்வேனியா, நியூ ஜெர்சி, மேரிலேண்ட் ஆகிய நகரங்களில் கனமழை பெய்யும் என்று அமெரிக்காவின் தேசிய வானிலை மையம் முன்னுரைத்துள்ளது.

டெக்சஸ் மாநிலத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

மணிக்குக் குறைந்தது 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் வெயில் கொளுத்தலாம் என்றும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 26ஆம் தேதியன்று புயல் காரணமாக அமெரிக்காவின் 20 மாநிலங்கள் பேரளவில் பாதிப்படைந்தன.

சுழல்காற்று, புயல் காரணமாக கட்டடங்கள் தரைமட்டமானதுடன் பல கார்களும் கவிழ்ந்தன.

மின்சாரக் கம்பங்கள் சாய்ந்ததில் மின்சாரமின்றி பலர் அவதியுற்றனர்.

குறிப்புச் சொற்கள்