ஜோகூர் பாரு: அறிவிக்கப்பட்டாத மொத்தம் 135 டன் அளவிலான உறையவைக்கப்பட்ட இறைச்சி வகைகளை ஜோகூர் சுங்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி வகைகளின் மதிப்பு 2.1 மில்லியன் ரிங்கிட் (603,000 வெள்ளி) ஆகும். அந்த இறைச்சி வகைகள் உரிமமின்றி இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.
மே மாதம் 21ஆம் தேதியன்று சிங்கப்பூரிலிருந்து வந்த ஐந்து லாரிகளிலிருந்து அந்த இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜோகூர் சுங்கத் துறை இயக்குநரான அமினுல் இஸ்மீர் முகம்மது சொஹாய்மி தெரிவித்தார்.
“ஒவ்வொரு லாரியிலும் 27 டன் அளவிலான உறையவைக்கப்பட்ட இறைச்சி வகைகள் இருந்தன. பன்றி, மாடு, கோழி நெஞ்சு, கோழி இறக்கை ஆகிய இறைச்சி வகைகள் அவற்றில் அடங்கும் என்று நம்பப்படுகிறது. அனைத்தின் மதிப்பும் மொத்தம் 2.1 மில்லியன் ரிங்கிட்டாகும்,” என்று திரு அமினுல் ஸ்மீர் முகம்மது சொஹாய்மி திங்கட்கிழமை (மே 27) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடர்கிறது.

