வேலை நிறுத்தம் செய்யப்போவதாக சம்சுங் ஊழியரணி மிரட்டல்

வேலை நிறுத்தம் செய்யப்போவதாக சம்சுங் ஊழியரணி மிரட்டல்

2 mins read
01c100a0-7da1-4a80-be4c-755720010d19
வரலாற்றில் முதன்முறையாக இடம்பெறக்கூடிய வேலை நிறுத்தம். - படம்: ஏஎஃப்பி

சோல்: வரலாற்றில் முதன்முறையாக வேலை நிறுத்தம் செய்யப்போவதாக சம்சுங் இலெக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் ஊழியரணி மிரட்டல் விடுத்துள்ளது.

கூடுதல் சம்பளம் கேட்டு சம்சுங் ஊழியர்கள் அடுத்த வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்சுங் ஊழியரணி அதிகாரிகள் புதன்கிழமையன்று (மே 29) இத்தகவல்களை வெளியிட்டனர்.

அந்த ஊழியரணியில் சுமார் 28,000 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அந்த எண்ணிக்கை, சம்சுங்கின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 20 விழுக்காட்டுக்கும் அதிகமாகும்.

ஜூன் மாதம் ஏழாம் தேதியன்று ஒரு நாளுக்கு வேலை நிறுத்தம் செய்ய சம்சுங் ஊழியரணி திட்டமிட்டுள்ளது.

ஊழியரணி பல்வேறு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. அதன் ஓர் அங்கமாக ஜூன் ஏழு நடக்கவுள்ள வேலை நிறுத்தம் இடம்பெறும்.

நேரலையாக ஒளிபரப்பப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் சம்சுங் ஊழியரணி அதிகாரிகள் இந்த அறிவிப்பை மேற்கொண்டனர். செய்தியாளர் கூட்டத்தின்போது “ஊழியர்கள், ஊழியரணி மீதான அடக்குமுறையை இனி எங்களால் சகித்துக்கொள்ள முடியாது,” என்ற வார்த்தைகளைக் கொண்ட பதாகையை செய்தியாளர் கூட்டத்தின்போது ஊழியரணி உறுப்பினர்கள் ஏந்திக்கொண்டிருந்தனர்.

அனைத்து ஊழியரணி உறுப்பினர்களும் அடுத்த வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அதுவே சம்சுங் இலெக்டிரானிக்ஸ் ஊழியர்களின் முதல் வேலை நிறுத்தமாகும்.

தென்கொரியத் தலைநகர் சோலில் உள்ள சம்சுங்கின் அலுவலக வளாகங்களுக்கு வெளியே கடந்த சில வாரங்களாக சில ஊழியர்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஹுவாசியோங் நகரில் உள்ள அந்நிறுவனத்தின் ஆலைக்கு வெளியிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

இவ்வாண்டு ஊழியர்களின் சம்பளத்தை 5.1 விழுக்காடு அதிகரிக்கப்போவதாக சம்சுங் முன்னதாக அறிவித்தது. அதன் தொடர்பில் தங்களுக்குக் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை தரப்படவேண்டும் என்றும் வெளிப்படையான முறையில் ஊழியர் செயல்பாட்டுக்கு ஏற்ற போனஸ் கட்டணங்கள் வழங்கப்படவேண்டும் என்றும் சம்சுங் ஊழியரணி கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்