பாப்புவா நியூ கினியில் மே மாதம் 24ஆம் தேதியன்று ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜஸ்டின் தாட்செங்கோவுக்கு சிங்கப்பூர் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.
அந்த நிலச்சரிவால் 2,000க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கினர். அச்சம்பவத்தால் தாம் ஆழ்ந்த சோகத்துக்கு ஆளானதாக திரு தாட்செங்கோவுக்கு அனுப்பிய கடிதத்தில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
“சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று டாக்டர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார். மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அரசாங்கம் 50,000 டாலர் (67,400 வெள்ளி) உதவி வழங்கும் என்றும் அவர் கூறினார்.
அதைத் தவிர மேலும் 50,000 வெள்ளி வழங்கப்போவதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் புதன்கிழமையன்று (மே 29) முன்னதாகத் தெரிவித்திருந்தது.
பாப்புவா நியூ கினி நிலச்சரிவில் இடிபாடுகளிலும் மண்ணிலும் புதைந்த 2,000க்கும் அதிகமானோர் மாண்டுவிட்டதாக அஞ்சப்படுகிறது.
எங்கா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது. அறுவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஏறத்தாழ 7,849 பேர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது. வீடுகளிலிருந்து வெளியேறவேண்டியவர்கள், இடம் மாறவேண்டியவர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டோரில் அடங்குவர் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் செவ்வாய்க்கிழமையன்று (மே 28) தெரிவித்தது.
பாதிக்கப்பட்டோருக்கு உணவு, தண்ணீர், தங்கும் வசதி போன்றவற்றை வழங்க சிங்கப்பூர் வழங்கும் உதவி பயன்படுத்தப்படும் என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் புதன்கிழமையன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
பாப்புவா நியூ கினி செஞ்சிலுவைச் சங்கம், அனைத்துலக செஞ்சிலுவைச் சம்மேளனம் மற்றும் ரெட் கிரெசண்ட் சமூகங்கள் (ஐஎஃப்ஆர்சி) ஆகிய அமைப்புகளிடம் உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

