தைப்பே: சர்வாதிகார எல்லை விரிவடைவதற்கு’ எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தைவான் பணியாற்றும் என்று தைவான் அதிபர் லாய் சிங்-டே தெரிவித்து உள்ளார்.
தைவான் வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் புதன்கிழமை (மே 29) அவர் இதனைக் கூறினார்.
தன்னாட்சியாக இயங்கிவரும் தீவான தைவானைச் சுற்றிலும் சீனா ராணுவப் பயிற்சியை நடத்தி முடித்திருக்கும் வேளையில் திரு லாயின் கருத்து வெளியாகி உள்ளது.
தைவான் அதிபரை ‘துரோகி’ என்றும் ‘அமைதி, நிலைத்தன்மையை சீர்குலைக்கக்கூடியவர்’ என்றும் சீனா விமர்சித்தது.
அதிபர் பதவி ஏற்ற பின்னர் மே 20ஆம் தேதி அறிமுக உரை நிகழ்த்திய திரு லாய், தைவானின் அரசுரிமையையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கப் போவதாக சூளுரைத்து இருந்தார்.
அவர் பதவி ஏற்ற மூன்று நாள்கள் கழித்து சீனாவின் போர்க் கப்பல்களும் ராணுவ விமானங்களும் தைவானைச் சூழ்ந்தன. தைவான் தீவை கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான பயிற்சியில் அவை ஈடுபட்டன.
தைவான் சுதந்திரத்திற்கு ஆதரவாகப் பேசிய திரு லாய்க்கு இந்தப் பயிற்சி ஒரு ‘தண்டனை’ என்று சீனா கூறியது.
தைவான் தனது ஆட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதி என்று கூறிவரும் சீனா, அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதை ஒருபோதும் நிறுத்தப்போதில்லை.
தொடர்புடைய செய்திகள்
புதிய அதிபர் பதவி ஏற்ற பின்னர் அமெரிக்க நாடாளுமன்றப் பேராளர்கள் தைவான் சென்றுள்ளனர். அவர்களிடம் பேசிய திரு லாய், தைவானின் ஆதரவு அமெரிக்காவுக்குத் தொடரும் என்று கூறினார். அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடு தைவான்.
“கொள்ளைநோயை எதிர்கொண்ட காலத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவினோம். தற்போது சர்வாதிகார எல்லை விரிவடையும் இந்த வேளையிலும் அதற்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும்,” என்றார் அவர்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “முன்னோக்கிப் பார்க்கையில், ஜனநாயகத்தைப் பாதுகாக்க எங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்வோம். அப்போதுதான் தைவான் உலகம் முழுவதும் பிரகாசிக்க முடியும்,” என்றார்.

