சிங்கப்பூர், பாத்தாமுடன் ஒற்றைக் குடிநுழைவு முறை: ஜோகூர் பரிசீலனை

சிங்கப்பூர், பாத்தாமுடன் ஒற்றைக் குடிநுழைவு முறை: ஜோகூர் பரிசீலனை

2 mins read
d532e669-ee08-44f6-813d-2654f4f996a2
ஜோகூர்-சிங்கப்பூர்-பாத்தோம் இடையிலான ஒற்றைக் குடிநுழைவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் அது சுற்றுப்பயணிகளையும் முதலீட்டாளர்களையும் அதிகம் ஈர்க்கும் என்று இஸ்கந்தர் மலேசிய ஜோகூர் வர்த்தக, தொழிற்சபையின் தலைமைச் செயலாளர் முகம்மது சலிக்கோன் சார்ப்பின் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: ஜோகூர், சிங்கப்பூர், பாத்தாம் இடையே ஒற்றைக் குடிநுழைவு முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்தோனீசிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி இருப்பதாக ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தோனீசியாவின் ரியாவ் தீவுகளுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டதாக திரு ஓன் ஹஃபிஸ் கூறினார். அவருடன் மலேசியப் பேராளர்களும் சென்றிருந்தனர்.

“2023ஆம் ஆண்டில் பாத்தாமின் பொருளியல் வளர்ச்சி 7.04 விழுக்காடு. இது மிகவும் பாராட்டிற்குரியது. வெளிநாட்டு முதலீட்டின் ஆதரவுடன் பாத்தாமில் ஏற்பட்டுள்ள நேர்மறை பொருளியல் வளர்ச்சியை இது காட்டுகிறது.

“பல்வேறு திட்டங்கள் குறித்து இந்தோனீசிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம். ஜோகூர்-சிங்கப்பூர்-பாத்தோம் இடையே ஒற்றைக் குடிநுழைவு முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் பேசினோம்,” என்று திரு ஓன் ஹஃபிஸ் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

தற்போதைய உள்கட்டமைப்பு, படகுச் சேவைகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜோகூருக்கும் பாத்தாமுக்கும் இடையிலான சுகாதாரத்துறை ஒத்துழைப்பு தொடர்பாகவும் இருதரப்பு அதிகாரிகள் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.

“வர்த்தகம் மற்றும் முதலீட்டு இணைப்பை வலுப்படுத்த இது ஓர் உத்திபூர்வ நடவடிக்கை என்று ஜோகூர் மாநில அரசாங்கம் மிக உறுதியாக நம்புகிறது,” என்றார் திரு ஓன் ஹஃபிஸ்.

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம், சிறப்பு நிதி மண்டலம் ஆகியவை ஜோகூரில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதை அவர் சுட்டினார்.

இதற்கிடையே, ஜோகூர்-சிங்கப்பூர்-பாத்தோம் இடையிலான ஒற்றைக் குடிநுழைவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் அது சுற்றுப்பயணிகளையும் முதலீட்டாளர்களையும் அதிகம் ஈர்க்கும் என்று இஸ்கந்தர் மலேசிய ஜோகூர் வர்த்தக, தொழிற்சபையின் தலைமைச் செயலாளர் முகம்மது சலிக்கோன் சார்ப்பின் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்