தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எகிப்துடனான காஸா எல்லையை முழுமையாகக் கைப்பற்றிய இஸ்‌ரேல்

2 mins read
eac825e6-d3ac-4d33-b013-c145f922e3c4
இஸ்‌ரேலியத் தாக்குதல்களால் மில்லியன்கணக்கான பாலஸ்தீன அகதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெண்களும் சிறாரும் அடங்குவர். - படம்: ராய்ட்டர்ஸ்

கெய்ரோ: எகிப்துடனான காஸா எல்லையை இஸ்‌ரேல் முழுமையாக் கைப்பற்றியுள்ளது. காஸா முனைக்கும் எகிப்துக்கும் இடையிலான வழிப்பாதையை அது தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளது. அந்த 14 கிலோமீட்டர் வழிப்பாதை எகிப்துடன் காஸா முனையை இணைக்கும் ஒரே நிலப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

எகிப்துடனான காஸா எல்லை முழுவதையும் தனது படைகள் கைப்பற்றிவிட்டதாக இஸ்‌ரேலிய ராணுவம் மே 29ஆம் தேதியன்று தகவல் வெளியிட்டது.

இதுவரை அந்த வழிப்பாதை வாயிலாகப் பாலஸ்தீன அகதிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

இனி ராஃபாவில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கு அனுப்பப்படும் உணவு, நீர், மருந்து ஆகியவை அவர்களைச் சென்றடைய என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படும் என்பது குறித்து இஸ்‌ரேல் தகவல் தெரிவிக்கவில்லை என்று அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.

ராஃபாவில் மில்லியன்கணக்கான பாலஸ்தீன அகதிகள் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் இன்னும் ஏழு மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என்று இஸ்‌ரேல் தெரிவித்துள்ளது.

ராஃபா மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பளித்தும் இஸ்‌ரேல் அதைப் புறக்கணித்து அந்நகரம் மீதான தாக்குதல்களைத் தொடர்கிறது.

காஸா முனைக்கும் எகிப்துக்கும் இடையிலான வழிப்பாதையைக் கைப்பற்றியதன் மூலம் ஹமாஸ் அமைப்புக்குப் பேரளவிலான பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இஸ்‌ரேல் கூறியது.

அந்த வழியாகத்தான் ஹமாஸ் போராளிகளுக்கு ஆயுதங்கள் அனுப்பிவைக்கப்படுவதாக இஸ்‌ரேலிய ராணுவம் தெரிவித்தது.

இதற்கு முன்பு காஸா முனையையும் எகிப்தையும் இணைக்கும் வழிப்பாதை இஸ்‌ரேலின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்ததில்லை.

மே 29ஆம் தேதியன்று இஸ்‌ரேலிய கவச வாகனங்கள் ராஃபா நகருக்குள் சென்று தாக்குதல் நடத்தின.

மே 28ஆம் தேதியன்று அவை முதன்முதலாக ராஃபாவின் மையப் பகுதிகளுக்குள் நுழைந்தன என்பது கவனிக்கத்தக்கது.

பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்ற பாலஸ்தீன அகதிகளை இஸ்‌ரேலுக்குச் சொந்தமான ஆளில்லா வானூர்திகள் குறிவைத்துத் தாக்கியதாகவும் உதவி கேட்டு பலர் மன்றாடியதாகவும் ராஃபா ஆம்புலன்ஸ், அவசரகாலச் சேவைப் பிரிவின் துணை இயக்குநர் ஹைத்தம் அல் ஹம்ஸ் தெரிவித்தார்.

காஸாவெங்கும் இஸ்‌ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்களில் 19 பேர் மாண்டதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். இதை இஸ்‌ரேல் மறுத்தது.

பொதுமக்களுக்குப் பின்னால் ஹமாஸ் அமைப்பினர் ஒளிந்துகொண்டிருப்பதாக அது குற்றம் சாட்டியது.

இஸ்‌ரேலின் இந்தக் குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்தது.

குறிப்புச் சொற்கள்
ராஃபாஇஸ்‌ரேல்அகதி