ஜோகூர் பாரு: சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையே நிலவழிச் சோதனைச்சாவடிகள் வழியாகப் பயணம் மேற்கொள்ளுபவர்கள் புதிய கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறையைக் குறித்துக் குழப்பமடையத் தேவையில்லை என ஜோகூர் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
ஜூன்1ஆம் தேதியிலிருந்து மூன்று மாத முன்னோட்டத் திட்டமாக இம்முறை நடைமுறைக்கு வந்தாலும் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான ‘எம்பைக்’ சோதனை முறையும் தற்போது நடப்பில் இருக்கும் அனைத்துக் குடிநுழைவுத் தடங்களும் பயன்பாட்டில் இருக்கும் என ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் முகமது பைசல் சம்சுதீன் ‘த ஸ்டார்’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மேலும், “புதிய கியூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்தாமல் தற்போது நடப்பில் இருக்கும் குடிநுழைவு முறைகளையும் தொடரலாம் என்பதால் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை,” என்றும் அவர் கூறினார்.
“புதிய குடிநுழைவு முறையைப் பயன்படுத்துவது கட்டாயமில்லை என்றாலும் அதைப் பதிவுசெய்து பயன்படுத்துமாறு பயணிகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம். நாங்கள் காலக்கெடு விதிக்கும்வரை அவர்கள் நடப்பில் இருக்கும் குடிநுழைவு முறைகளைப் பயன்படுத்தலாம்,” என்றார் அவர்.
இந்த முன்னோட்டக் காலத்தில், அனைத்து போக்குவரத்து சேவைகளுக்கும் சில கியூஆர் குறியீட்டு முறைகளைக் குடிநுழைவுத் துறை சோதனை செய்யும் என்றும் அவர் கூறினார்.
ஜோகூர் குடிநுழைவுத் துறையின் இரண்டாவது தடத்தில் பேருந்து அல்லது மோட்டார் சைக்கிள் மூலம் பயணிப்பவர்கள், ‘மைசெஜாதேரா’ கைப்பேசி செயலியில் இருக்கும் ‘மைடிரிப்’ செயல்பாட்டின் மூலம் கியூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்தார்.
முதலில் அவர்கள் தங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துள்ள ‘மைசெஜாதேரா’ செயலியைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் அதற்குப் பிறகு தங்கள் கடவுச்சீட்டை ‘மைடிரிப்’ மூலம் இணைக்க வேண்டும் என்றும் புதிய கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை குறித்து இயக்குநர் எடுத்துரைத்தார்.
அதற்குப் பிறகு கியூஆர் குறியீட்டை உருவாக்கலாம் எனவும் பின்னர் அந்தக் குறியீடு குடிநுழைவு சோதனைச்சாவடியில் மின்வருடப்பட்டு சோதனை நிறைவுசெய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

