நியூயார்க்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரானிய அதிபர் இப்ராகிம் ரைஸிக்கு ஐநா சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவருக்கு பல நாடுகள் புகழாஞ்சலி சூட்டின. ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் அஞ்சலி நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளன.
பல நாடுகள் ரைஸிக்கு புகழாரம் சூட்டினாலும் சில நாடுகள் புறக்கணித்ததால் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பிளவை அது வெளிச்சம்போட்டுக் காட்டியது.
அமெரிக்கப் பேராளர் குழுவின் பேச்சாளரான நேடே இவான்ஸ், அவரது பதவி காலத்தில் மோசமான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன என்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியப் பேராளர் குழு வெளியிட்ட தனியொரு அறிக்கையில் “ஆயிரக்கணக்கான சொந்த குடிமக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான ஒரு சர்வாதிகாரியைப் புகழ்வது உலக அமைப்பில் நடந்துள்ள மோசமான செயல்,” என்று கூறியுள்ளது.
இதற்கு மாறாக, 54 ஆப்ரிக்க நாடுகளின் சார்பில் பேசிய ஐநாவுக்கான புருண்டி தூதர் ஸெப்பிரின் மனிராடாங்க, ரைஸியை ஒரு தொலைநோக்குள்ள தலைவர் எனப் பாராட்டினார்.
அனைத்துலக அளவில் அவர் ஒத்துழைப்பை மேம்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
அணிசேரா நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகளின் சார்பில் உரையாற்றிய உகாண்டாவின் பிரதிநிதி, ரைஸியும் அவருடன் உயிரிழந்த வெளியுறவு அமைச்சர் ஹுசேன் அமிர் அப்துல்லாஹியனும் வளரும் நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த முக்கிய பங்காற்றியதாகக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
லத்தீன் அமெரிக்க மற்றும் ஆசிய நாடுகளின் பிரதிநிதிகளும் ஏறக்குறைய 200 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபைக்கு முன்பாக தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர். ஆனால் ஐரோப்பிய நாடுகள் அமைதியாக இருந்தன.

