பெட்டாலிங் ஜெயா: மதியிறுக்க நோயால் பாதிக்கப்பட்ட ஆறு வயதுச் சிறுவன் ஸய்ன் ரையன் அப்துல் மதின் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மலேசியக் காவல்துறை சிறுவனின் பெற்றோரைக் கைது செய்துள்ளது.
2023ஆம் ஆண்டு டிசம்பரில் அச்சிறுவன் கொலை செய்யப்பட்டான்.
அச்சம்பவம் தொடர்பில் மே 31ஆம் தேதி காலை 11 மணியளவில் புன்சாக் ஆலமில் அவனது பெற்றோர் கைது செய்யப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.
சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
கைது செய்யப்பட்ட தம்பதியை தடுப்புக் காவல் உத்தரவுக்காக ஜூன் 1ஆம் தேதி காலை பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவிருப்பதாக அவர் கூறினார்.
சென்ற ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி, ஸய்ன் ரையனைக் காணவில்லை என்று புகாரளிக்கப்பட்டது. மறுநாள் கோலாலம்பூரில் அவனது வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.
உடற்கூராய்வு அறிக்கையில் சிறுவனின் கழுத்திலும் உடலிலும் காயங்கள் காணப்பட்டதாகவும் அவன் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சிறுவன் கொலை செய்யப்பட்ட இடத்தை அடையாளம் காண்பதில் சிரமத்தை எதிர்கொண்ட மலேசியக் காவல்துறை இவ்வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முனைப்புடன் செயல்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம், சிறுவன் கொலை தொடர்பில் தகவல் தருவோர்க்கு 20,000 ரிங்கிட் (S$5,700) தரப்படும் என்றும் சிலாங்கூர் மலேசியக் குற்றத் தடுப்பு அறக்கட்டளை அறிவித்திருந்தது.

