மிட்ராண்ட்: தென்னாப்பிரிக்காவில் இவ்வார இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
முப்பது ஆண்டுகால ஜனநாயகத்தில் ஆளும் ஆப்பிரிக்க நேஷனல் காங்கிரஸ் (ஏஎன்சி) கட்சி பெரும்பான்மையை இழந்து வீழ்ச்சியடையும் எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது.
சிறுபான்மையினரின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் 1994ஆம் ஆண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் நடைபெற்றது. அப்போதிலிருந்து ஏஎன்சி ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றிப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வருகிறது. ஆனால் நிலைமை தற்போது மாறிவிட்டது. நாட்டில் நிலவும் பொருளியல் தேக்கம், வேலையின்மை, உள்கட்டமைப்பு வசதிகளின் சீரழிவு ஆகியவற்றை தென்னாப்பிரிக்க மக்கள் கண்கூடாகப் பார்த்து வருகின்றனர். இதனால் மக்களின் ஆதரவு அக்கட்சிக்குக் குறைந்துவிட்டது.
மே 29ஆம் தேதி 23,000 வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் 97 விழுக்காடு வெளியாகியுள்ளன. இதில் ஏஎன்சி 40.11 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டில் அக்கட்சி 57.50 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றிருந்தது.
நாட்டின் ஆகப்பெரிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கூட்டணி 21.72 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றுள்ளது. முன்னாள் அதிபர் ஜாகோப் ஸுமா தலைமையிலான புதிய உம்காண்டோ (எம்கே) கட்சி 14.83 விழுக்காட்டு வாக்குகளைக் கைப்பற்றியுள்ளது.
ஏஎன்சி, மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க வேண்டிய சூழலில் உள்ளது.
இந்நிலையில் ஆப்ரிக்காவின் தொழில்துறையினர் நிச்சயமற்ற சூழல் விரைவில் தெளிவாகிவிடும் என்று நம்பிக்கையில் உள்ளனர்.
முந்தைய விடுதலை இயக்கமான ஏஎன்சியின் தலைவரும் அதிபருமான சிறில் ரமபோசா, அடுத்த அதிபராகும் வாய்ப்பு இருந்தாலும் அவரது செல்வாக்கு சரிந்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் அவரைப் பதவி விலக கோரிக்கை விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியிலும் அவருக்கு எதிராக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

