தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கியூஆர் குறியீட்டு முறையைப் பயன்படுத்திய 70,000 பேர்

1 mins read
bedcaee9-bb6a-48f6-839e-f87c7bcb14e9
கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை முன்னோட்டத் திட்டத்தின் முதல்நாள் ஜோகூரில் உள்ள சுல்தான் அபு பக்கர் சுங்கத்துறை, குடிநுழைவுச் சோதனைச்சாவடியில் வெற்றிகரமாக நடந்தேறியது என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: மலேசிய ஊடகம்

ஜோகூர் பாரு: சிங்கப்பூருக்கு வரும் மலேசியர்களுக்கான கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை முன்னோட்டத் திட்டம் ஜூன் 1ஆம் தேதி தொடங்கியது.

முன்னோட்டத் திட்டத்தின் முதல் நாளில் கிட்டத்தட்ட 70,000 பேர் புதிய அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

மலேசியா-சிங்கப்பூர் நிலம்வழிச் சோதனைச்சாவடிகளில் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இத்திட்டம் இலக்கு கொண்டுள்ளது.

‘மை டிரிப்’ என்று அழைக்கப்படும் இந்த கியூஆர் குறியீட்டுச் செயலி தங்குதடையின்றி சுமுகமாகச் செயல்பட்டதாக மலேசியக் குடிநுழைவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னோட்டத் திட்டத்தின் முதல்நாள் ஜோகூரில் உள்ள சுல்தான் அபு பக்கர் சுங்கத்துறை, குடிநுழைவுச் சோதனைச்சாவடியில் வெற்றிகரமாக நடந்தேறியது என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், இந்த முன்னோட்டத் திட்டத்தின் முதல் நாள் குறித்து மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நேரத்தில், ஜோகூரில் உள்ள இன்னொரு நிலம்வழிச் சோதனைச்சாவடியான சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவுச் சோதனைச்சாவடியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கியூஆர் குறியீட்டு முறையைத் தொடங்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே நடப்பில் இருந்த குடிநுழைவு முறையைப் பயணிகள் பயன்படுத்தினர்.

புதிய கியூஆர் குறியிட்டுக் குடிநுழைவு முறையை மலேசியர்கள் மிகுந்த ஆவலுடன் பயன்படுத்தியதாக ஜோகூர் குடிநுழைவுத் துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்